மாதவனின் பஞ்சாங்க கருத்துக்கு பதிலடி கொடுத்த விஞ்ஞானி!

1994ம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி கிரியோஜெனிக் இந்திய ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக்கூறி கைது செய்யப்பட்டார் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவர் இந்திய அறிவியலாளரும் இஸ்ரோவின் முன்னாள் முக்கிய அதிகாரியும் ஆவார்.…

1994ம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி கிரியோஜெனிக் இந்திய ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக்கூறி கைது செய்யப்பட்டார் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவர் இந்திய அறிவியலாளரும் இஸ்ரோவின் முன்னாள் முக்கிய அதிகாரியும் ஆவார். வாயுக்களை திரவமாக மாற்றி அதை எரிபொருளாக பயன்படுத்துவது கிரயோஜெனிக் டெக்னாலஜி ஆகும். அப்துல்கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக பயன்படுத்தி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது, திரவ எரிபொருள் பயன்படுத்துவது குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டிருந்தார் நம்பி நாராயணன்.

இவர் கைது செய்யப்படும்போது இந்திய விஞ்ஞானி பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றுவிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. 1996-ம் ஆண்டில் இது கேரள காவல்துறையால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எனவும் நம்பி நாராயணன் நிரபராதி எனவும் சி.பி.ஐ அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து நம்பி நாராயணனை விடுவித்தது நீதிமன்றம்.சிறையில் இருந்தபோது தான் அடித்து துன்புறுத்தப்பட்டதுடன் பல்வேறு சித்தரவதைகளுக்கும் ஆளானதாக ‘Orbit of memories’ என்கிற தன் சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருந்தார் நம்பி. மேலும், ‘எனக்கு நேர்ந்தவை எல்லாம் ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பது போலவும்.. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நானே இருப்பது போலவும் எனக்குத் தோன்றியது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராகெட்ரி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect) எனும் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் நடிகர் மாதவன். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் 75வது கேன்(cannes) திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பையும் பெற்றது. வரும் ஜூலை 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர், “ மாதவன், உலகத்துல எத்தனையோ நாடு இருந்தாலும் நம்ம நாட்டுல தான் விஞ்ஞான சாஸ்திரம், பஞ்சாங்கம் இதையெல்லாம் வச்சி ஆர்யபட்டா மாதிரியானவங்க நட்சத்திரம், கோள்களை பத்தியெல்லாம் ஆராய்ச்சி பண்ணிருக்காங்க, அந்த பழைய பஞ்சாங்கத்துக்கும் இன்னைக்கு உள்ள ராக்கெட்ரிக்கும் எதுனா தொடர்பு இருக்குன்னு நினைக்குறீங்களா’ என ஒரு கேள்வி எழுப்பினார்.

உடனே உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்ற மாதவன், “ ரொம்ப நல்ல கேள்விங்க. Actually ரொம்ப தொடர்பு இருக்குங்க, அதோட அருமை என்னன்னு இப்போ சொல்றேன்.. பூமில இருந்து மார்ஸ்-க்கு சேட்டிலைட் அனுப்பறதுக்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா எல்லாம் பல மில்லியன் செலவு செஞ்சி பலமுறைய முயற்சி செஞ்சி 30வது வாட்டி, 32வது வாட்டி தான் வெற்றி பெற்றாங்க. ஆனா 2014ல இந்திய அனுப்புன முதல் சேட்டிலைட்டே வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துல லாஞ்ச் ஆகிடுச்சி. செவ்வாய் கிரகத்துக்கு போறதுக்கு, solid fuel (திட எரிபொருள்), liquid fuel(திரவ எரிபொருள்), கிரியோஜெனிக் என்ஜின் ஆகிய இந்த மூனு வச்சிதான் எல்லா நாடுகளும் ராக்கெட்டை விட்டாங்க.

இதுக்காக அவங்க பலநூறு மில்லியன் டாலர்கள செலவு பண்னாங்க. ஆனா இந்தியாக்கிட்ட இருக்க இன்ஜின் அவ்ளோ powerful-ஆக இல்ல. ஆனா 2014ல இந்தியா சார்பாக வெற்றிகரமா செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை லாஞ்ச் பண்ணாங்க. நம்ம பஞ்சாங்கத்துல இருக்க வான வரைபடத்துல கிரகங்கள்லாம் எங்க இருக்கு, அதோட ஈர்ப்பு விசை எப்படி இருக்குன்னு எல்லாமே ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி எழுதி வச்சிட்டாங்க. அந்த பஞ்சாங்கத்துல இருக்க தரவுகள வச்சி குறிப்பிட்ட நேரத்தில சரியான மைக்ரோ செகண்ட்ல ஸ்ரீ ஹரிக்கோட்டால இருந்து இந்த ராக்கெட்டை அனுப்புனாங்க. இந்த தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்குள்ள நம்ம சேட்டிலைட் போக உதவியா இருந்துச்சி. நம்ம கிட்ட இருக்க சின்ன பட்ஜெட்ல,கம்மியான பவர் வச்சிக்கிட்டும் இந்த mission possible ஆச்சுன்னா அது பஞ்சாங்கத்தாலதான்’ என ஒரே போடாக போட்டார்.

‘அரிய வகை பூமர் மாதவன்’

இதை பிளு பிளுவென பிடித்துக்கொண்ட இணையவாசிகள் நடிகர் மாதவனுக்கு ‘அரிய வகை பூமர் மாதவன்’ என்றெல்லாம் பட்டம் கொடுத்து கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

பழைய பஞ்சாங்கம் என்பது அப்போது நம் முன்னோர்களின் அறிவுக்கும், அதனால் வாய்க்கப்பெற்ற அறிவியலுக்கும் ஏற்றவகையில் உருவாக்கப்பட்டது எனவும் தற்போதைய காலத்தில் அதைவிட பல நூறு மடங்குகள் அப்டேட்டான வானவியல் ஆராய்ச்சிகளையும் அதுதொடர்பான கோட்பாடுகளையும் நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர் என்றும் கூறிவருகின்றனர்.

மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

இதுதொடர்பாக பேசிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ’ஆண்டாண்டுகாலமாக இருக்கக்கூடியது ஒரே பஞ்சாங்கம் அல்ல. ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்த வச்சி இன்னைக்கு நாம செவ்வாய் கிரகத்துக்கு போறது முடியாத காரியம். காலத்திற்கு ஏற்றவாரு மாறும் கிரகங்களின் இடம் மாறும் அதற்கேற்றவாரு வானியல் கோட்பாடுகளை வரையறுத்து அதுக்கேத்தமாதிரிதான் நாங்க ராக்கெட்டையும் சேட்டிலைட்டையும் இயக்கவும். இது பழைய பஞ்சாங்கத்தின் அடிப்படை ஆனதல்ல! முழுக்க முழுக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது. இதற்கு முன்பு பலர் தோற்றுப்போனார்கள் எனறால் அதையும் கவனத்தில் கொண்டு அந்த தவறுகளை அப்டேட் செய்துதான் நாம் சேட்டிலைட்டை அனுப்பி வெற்றி பெற்றோம். பஞ்சாங்கம் தொடர்பாக மாதவன் கூறிய பகுதியில் மட்டும் தவறு இருக்கிறது’ என கூறிவிட்டார்.

தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த இந்த பேட்டியை வைத்து மாதவனை ரணகளமாக கலாய்க்க தொடங்கிவிட்டனர் இணையவாசிகள். அதிலும் ஒருவர், ‘மாட்டு சாணி மாதவனுக்கு செருப்பு அடி பதில்; எனக்கூறி இந்த பேட்டியை இணைத்து பதிவிட, அதையும் தன்னுடைய ட்விட்டரில் வணக்கத்துடன் ராக்கெட் விட்டு ஷேர் செய்து, எதிர்கருத்துக்கும் வாய்ப்பளித்து, பெருந்தன்மையாக நடந்துகொண்டுள்ளார் நடிகர் மாதவன். இதன் மூலம் தன்னுடைய  கருத்து தவறு என அவர் ஒப்புக்கொண்டுவிட்டார் எனவே பெரும்பாலானோர் புரிந்துகொள்கின்றனர். படத்தின் ட்ரெய்லருக்கு இத்தனை ரணகளங்கள் என்றால் படம் வெளியானதும் இதுபோலான பல மான்கராத்தேகள் நடைபெறலாம் எனவும் சினிமா ஆர்வலர்கள் கணித்து வருகின்றனர்.

– வேல் பிரசாந்த்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.