பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்தால் அந்த கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை காவல் ஆணையர்
சங்கர் ஜிவால் மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு மணற் சிற்பங்கள் கண்காட்சியை
திறந்து வைத்தார். போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக மாநிலக் கல்லூரி மாணவர்களின்
கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் போதை பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் உடல்
பாதிப்புகள், குடும்ப உறவுகள் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். குறிப்பாக,
42 ஆயிரம் மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிபுணர்வு நடத்தி உள்ளதாக
அவர் குறிப்பிட்டார். பள்ளிகளுக்கு அருகே தடைசெய்யப்பட்ட போதைபொருள் விற்றதாக
168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதைபொருள் விற்பனை இல்லை. மாறாக, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வருகிறது. தொடர்ந்து விற்பனை செய்தால் சென்னை மாநகராட்சி உதவியுடன் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரே நாளில் போதைப் பொருளை ஒழித்திட முடியாது. அது குறித்து விழிபுணர்வு மூலம் தான் அதனை தடுக்க முடியும். போதை பொருளுக்கு எதிரான காவல் துறையின் சோதனைகள் தொடரும் என சங்கர் ஜிவால் கூறினார்.








