தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் காலை அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் பலமணி நேரங்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுமதி எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல போலீஸ் காவலில் எடுக்கக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் இருந்து காவல்துறை வாகனத்தில் ஏறியபோது, “எவ்வளவுக்கு எவ்வளவு துன்பப்படுகிறோம் அவ்வளவு விரைவில் நாம் ஆட்சிக்கு வருகிறோம்” என்று தெரிவித்தார்.




