முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் ஆளுநர் சொன்னது என்ன?

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கருத்துகள்…

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கருத்துகள் என்ன என்பதை பார்க்காலம்…

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாகக் நேற்று முதலமைச்சருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் பல முக்கியக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.அதில், கடந்த மே மாதம் 16ஆம் தேதியிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து கடந்த மாதம் 31ஆம் தேதி முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். தன்னுடைய அறிவுரையை நல்ல கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளாமல் அரசமைப்பு சட்ட வரம்புகளை மீறுவதாக முதலமைச்சர் ஆத்திரத்துடன் எழுதிய பதில் தமக்கு ஏமாற்றத்தை அளித்ததாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதற்கான காரணங்களை முதலமைச்சர் வழங்க மறுத்துவிட்டார் என்றும், எனினும் அவர் வசமிருந்த இலாகாக்களை இரு அமைச்சர்களுக்கு வழங்கிய பரிந்துரைகளுக்கு தாம் ஒப்புதல் அளித்ததாகவும் ஆளுநர் கூறியுள்ளார். எனினும் செந்தில் பாலாஜியை நீக்க மறுத்து அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதற்கு வழிசெய்யும் அரசாணை வெளியிடப்பட்டதையும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான கருத்துக்களுக்கு பிறகும் செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர அனுமதித்ததால், வருமான வரித்துறை அதிகாரிகளை துன்புறுத்தும் அளவுக்கு அவர் துணிச்சல் பெற்றதாக ஆளுநர் கூறியுள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தாக்கி முக்கிய ஆவணங்களை பறித்து சென்றதாகவும் அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பை நாடும் அளவுக்கு நிலைமை மோசமானதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான காரணங்களையும் தனது கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டியலிட்டுள்ளார். அதில் “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை அமைச்சர் செந்தில் பாலாஜி தடுத்து வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். தற்போது அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார் என்றும் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாகப் பாதிக்கும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பது இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

இத்தகைய சூழலில் அரசியல் சட்டத்தின் 154,163 மற்றும் 164 ஆகிய பிரிவுகள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். எனினும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஐந்து மணி நேரங்களிலேயே அதனை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.

இந்த தகவலை தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை பெறும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தனக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். அட்டர் ஜெனரலின் ஆலோசனையை தாம் நாடியிருப்பதால் தன்னிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.