அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் தங்களுடைய குடிவரவு நிலையை மாற்ற நினைப்பவர்கள், நாட்டிற்கு வெளியே உள்ள தூதரக வழிமுறைகள் மூலமாகவே செய்ய வேண்டும்,” என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யூஎஸ்சிஐஎஸ்) தெரிவித்தது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளில் ஓர் அங்கமாக உள்ள இந்த நகர்வு, விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு வருகை தருபவர்கள் நாட்டில் இருக்கும்போதே கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பிக்க இருந்த வழியை மூடுகிறது.
அதாவது கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு மனுவையும் பொறுத்து அந்தந்த அதிகாரிகளே முடிவு செய்வார் கள் எனவும், கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஒருவரை அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டுமா என்பதை அந்தந்த அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் அல்லது பொது நல உதவிகளை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் போன்றவர்கள் மட்டுமே இந்த அறிவிப்பால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







