இந்தியா கூட்டணியின் பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படவில்லை – டெல்லி காவல்துறை விளக்கம்!

இந்தியா கூட்டணி சார்பில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு அனுமதி ரத்து செய்யப்படவில்லை எனத் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு அனுமதி ரத்து செய்யப்படவில்லை எனத் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள காவல்துறை, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி குற்றசாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள காவல்துறை, அக்டோபர் 17-ஆம் தேதியன்றே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சட்டம்-ஒழுங்கு கோணத்தில் பேரணிக்குத் தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது. பேரணி நடைபெறும் ராம்லீலா மைதானப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் 3,500 காவல்துறைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட உயர்  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. 

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மைதானப் பகுதி 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் உதவி ஆணையர் மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையர் அந்தத்திலுள்ள அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்குக் கூட்டம் நிறைவடைய வேண்டும் என்றும், மைதானத்தில் இரவு நேரத் தங்கலுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறையின் கடிதத்தில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான முறைகேடு புகார்களை எழுப்பி, இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்படும் இந்த மாபெரும் பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.