திமுகவின் நியூ வெர்ஷனான தவெக – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாகத் தலையிட்டு, தனது கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “செங்கல் மற்றும் ஜல்லியை இலவசமாகத் தர மறுத்த கிரேன் ஓட்டுநர் மீது தவெக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தவெக நிர்வாகி ஒருவர் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே, மீண்டும் ஒரு தவெக நிர்வாகி மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது ஆளும் கட்சியினரின் அராஜகப் போக்கைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

திமுக தீய சக்தி, தான் தூய சக்தி எனத் தம்பட்டம் அடித்துவிட்டு, தீய சக்தி திமுகவின் நியூ வெர்ஷனாக தவெக உருமாறி வரும் வேளையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாகத் தலையிட்டு, தனது கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்க வேண்டும்! அதுதான் தமிழக மக்களுக்கும் தவெகவுக்கும் நன்மையைப் பயக்கும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.