கடந்த 2026 அக்டோபர் 23 அன்று நடைபெற்ற காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் 145-வது கூட்டம் மற்றும் காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டங்களில், கர்நாடகா தன் நீர்த்தேக்கங்களிலிருந்து தினமும் சராசரியாக 3,000 கன அடி வீதம் 2026 அக்டோபர் 24 முதல் அடுத்த 15 நாட்களுக்கு (நவம்பர் 6 வரை) தண்ணீர் வந்து சேருமாறு திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு இந்த உத்தரவை முறைப்படி அமல்படுத்தாமல், குறைந்த அளவே தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது.
இதனை அடுத்து தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவை உறுதிசெய்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும் அக்டோபர் 24 முதல் அக்டோபர் 27 வரையிலான 4 நாட்களில், கர்நாடகா வழங்க வேண்டிய நீர் மற்றும் உண்மையில் பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்த நீரின் அளவை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.
அதன்படி கடந்த 24ம் தேதி 1652 கன அடி தண்ணீர் 25ஆம் தேதி 1853 கன அடி தண்ணீர் 26 ஆம் தேதி 1642 கன அடி தண்ணீர் 27 ஆம் தேதி 32 கன அடி தண்ணீர் என்ற குறைந்த அளவில்தான் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. எனவே 24.10.2026 முதல் 27.10.2026 வரையிலான காலத்தில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை கணக்கில் கொண்டு 3,851 கன அடி நீர் வழங்க உத்தரவிட வேண்டும். அதன் பின்னர் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியபடி, 06.11.2026 வரை தொடர்ந்து வினாடிக்கு 3,000 கன அடி நீரை வழங்குவதை உறுதிசெய்ய கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்துக்கு உரிய நிலுவை நீர் அளவை, விகிதாச்சார அடிப்படையில் பெற்றுத் தருவதை நீதிமன்றம் உறுதிசெய்யும் வகையில், 23.10.2026 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




