“அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வரவேற்கிறோம்” – ஆர்.பி.உதயகுமார்!

திமுக ஆட்சியை அகற்றுவதற்கு, அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வரவேற்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திமுக ஐ.டி.விங் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் வகையில் கேலிச் சித்திரம் உருவாக்கி சமூக வலைதளத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்ட விவகாரத்தில் திமுக ஐ.டி.விங் செயலாளர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

“கீழடியில் அகழாய்வுப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே எடப்பாடியார் ஆட்சியில் தான். ஆனால், திமுக ஐ.டி.விங் எடப்பாடி பழனிசாமி உருவத்தை கேலிசெய்து வரை படம் வெளியிட்டுள்ளனர். போட்ட சட்டையையே கிழித்துக்கொண்டு `ஐயோ, அம்மா’ என ஸ்டாலின் கதறிய காட்சிகளை கார்ட்டூனில் எல்லாம் வரைய வேண்டிய அவசியம் இல்லை.

கீழடி அகழாய்வில் சந்தேகம் இருந்தால் இத்திட்டங்களை முன்னிருந்து செயல்படுத்திய அதிகாரி, இப்போதைய நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், ஐ.ஏ.எஸ்.ஸிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கீழடி அகழாய்வு அறிக்கை நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல்
குரல் அதிமுகவின் குரலாகத் தான் இருக்கும். அவதூறு பரப்பும் டிஆர்பி ராஜா நடமாட முடியாது. அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

கீழடி தொடர்பாக ஓரே மேடையில் டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின் விவாதம் செய்ய தயாரா?” என்றார், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு, “திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்பதற்கு உடன்படும் ஒவ்வொருவரையும் எந்த விவாதமும் இல்லாமல் இருகரம் கூப்பி வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.