சபரிமலை பயணம் தானப்பா…. என் வழி துணையா வந்து சேருப்பா…..

சபரிமலை செல்லும் பக்தர்கள், கார்த்திகை ஒன்றாம் நாளான இன்று ஐயப்பனுக்கு மாலை அணிவித்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.   மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை…

சபரிமலை செல்லும் பக்தர்கள், கார்த்திகை ஒன்றாம் நாளான இன்று ஐயப்பனுக்கு மாலை அணிவித்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.

 

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் நாளான இன்று பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து இன்று முறைப்படி விரதத்தை தொடங்கினர்.

அந்த வகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணவிப்பதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 5 மணிக்கே கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு சரணகோஷம் எழுப்பினர். இதேபோன்று, மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீராடிய பக்தர்கள் குற்றாலநாதர் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம், வளவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாத முதல் நாளில் ஐயப்பன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து கொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சிறார்கள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். இதேபோல், பல இடங்களில் ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.