கள்ளக்குறிச்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை மூத்த காவல்துறை அதிகாரியின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்றும், யாருக்கும் சாதகமாக விசாரணை அமையக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். காவல்துறை ஐ.ஜி காமினி விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் வழங்கியிருந்தனர். புகார் அளித்த பெண் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலமும் அளித்திருந்தார்.
இந்த நிலையில், விசாரணையைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவரை எங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்துவது என்பது தொடர்பான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அருள் விக்னேஷின் வீட்டின் முன்பாக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கட்சித் தொண்டர்களும் திரண்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருந்த நிலையில், தற்போது சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




