தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராட்டங்களில் ஈடுபடவும் தயங்கமாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவையில் பசுமைத் தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கொங்குக்கு மையம் நொய்யல் ஆறு. அது இன்று மாசுபாட்டாலும், பலவகையான பிரச்சனைகளாலும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. நொய்யல் ஆற்றை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நொய்யல் ஆற்றை காப்பாற்ற வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை மாநகரத்திற்குள் வரும்போதுதான், நொய்யலில் தொழிற்சாலைகள் மற்றும் திடக்கழிகள் கலக்கிறது. சியாமளாபுரத்திலிருந்து திருப்பூர் மாநகரத்திற்குள் செல்வதற்கு முன்பே 30,000 சாயப்பட்டறைகளின் கழிவுகள் அதில் கலக்கின்றன. நாள்தோறும் 8.7 கோடி லிட்டர் கழிவு நீர் நொய்யலில் கலக்கப்படுகிறது. நொய்யல் ஆறு இன்று ஐ.சி.யூவில் இருக்கிறது. இதை காப்பாற்ற சுத்திகரிப்பு செய்ய வேண்டும். சாயக்கழிவு, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். அதேபோல் மணல் கொள்ளையையும் தடுக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நொய்யலை பாதுகாக்க அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு நிதி ஒதுக்க வேண்டும். கூவத்தை சுத்தபடுத்துவோம் என ஒதுக்கூடு செய்த 200 கோடி நிதி எங்கே சென்றது என தெரியவில்லை. முதற்கட்டமாக நான் இறங்கி இருக்கிறேன். தேவைப்பட்டால் போராட்டங்கள் நடத்தபடும். தமிழக அரசு நீர்மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். நேர்மையானவர்களை தலைவர்களாக்கி அதனை செயல்படுத்த வேண்டும். அடுத்தடுத்து நேரடியாக களத்துக்கு செல்வேன். விவசாய சங்கங்களை திரட்டி தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராட்டங்களில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். நீர் நிலைகளை இயற்கை வளங்களை பாதுகாக்க பாமக தொடர்ந்து போராடி வருகின்றது.
கடந்த ஆட்சியில் குடிமராமரத்து திட்டம் 10 சதவீதம் மட்டுமே நடந்தது. 90 சதவீதம் கொள்ளையடித்து விட்டனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் செயல்படுகின்றதா இல்லையா? ஜி.எஸ்.டியால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகமாக இருக்கின்றது. விவசாயத்துறை அமைச்சர், நிலத்தை பிடுங்கி என்.எல்.சிக்கு கொடுக்க முயல்கின்றார். என்.எல்.சியையே தனியாருக்கு கொடுக்க போகின்றனர்.
அடுத்த கட்டமாக ஒன்றரை மாதத்தில் நொய்யலை சீரமைக்க நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இதை ஒரு இயக்கமாக மாற்ற போகின்றோம். 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெரிய அளவில் ஓடிக்கொண்டு இருந்தது. நொய்யல் ஆற்றை சேர, சோழ, பாண்டியர்கள் பாதுகாத்துள்ளனர். இந்த வரலாற்றை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
பொன்னியின் செல்வன் அடுத்த பாகத்திலாவது இதைச் சொன்னால் வரலாறு மக்களுக்கு தெரியும். சினிமாவில் காட்டப்பட்டால்தான், மக்களுக்கு விரைவில் வரலாறு தெரியவரும். சினிமாவில் இருந்தால் அவை பேசு பொருளாகின்றன. பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஆதித்த கரிகாலன், நொய்யல் ஆற்றங்கரையில் 32 ஏரிகளை வெட்டினான் என்று சொன்னால்தான் நம் மக்களுக்கு புரியும். வெள்ளைக்காரர்கள் வந்த போது கூட ஏரிகள் பாதுகாக்கப்பட்டது. நம் ஆட்கள் வந்த பின்புதான் ஏரிகள் அழிய துவங்கியது” என்று பேசினார்.