ஏவுகணை தயாரிக்கப் பயன்படும் ரசாயனம் – நடுக்கடலில் சிக்கிய கப்பல்!

சீனாவில் இருந்து வங்கதேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 405 டன் சோடியம் பெர்குளோரேட் ரசாயனத்தை இந்தோனேசிய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்த ரசாயனத்தைக் கொண்டு சுமார் 100 ஏவுகணைகளைத் தயாரிக்க முடியும் என இந்தோனேசிய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய கடற்படை அதிரடி!

சீனாவில் இருந்து வங்கதேசம் நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலை இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது, அதில் சுமார் 405 டன் சோடியம் பெர்குளோரேட் (Sodium Perchlorate) ரசாயனம் கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக்சிஜனேற்றப் பண்புகளைக் கொண்ட இந்த ரசாயனம் பல்வேறு தொழில்துறைப் பயன்பாடுகளிலும், சில வெடிபொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. கொமோரோஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட MV Star Line என்ற அந்தக் கப்பல், நவம்பர் 7ஆம் தேதி சீனாவில் இருந்து வங்கதேசம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தோனேசிய கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சந்தேகத்தை ஏற்படுத்திய கப்பலின் வழித்தடம்!

இந்தச் சம்பவம் தொடர்பாக நவம்பர் 20ஆம் தேதி பெலாவான் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தோனேசிய கடற்படையின் பிராந்திய கட்டளைப் பிரிவு-1 (Koarmada I) தளபதி ரியர் அட்மிரல் டென்னி செப்டியானா விளக்கமளித்தார். அதன்படி, MV Star Line கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக பெலாவான் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. அப்போது வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த KRI Sigalu-857 என்ற இந்தோனேசிய கடற்படைக் கப்பலில் இருந்த வீரர்கள், சரக்குக் கப்பலின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்துள்ளனர். குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட கடல்வழிப் பாதையிலிருந்து அந்தக் கப்பல் விலகிச் செல்வதை அவர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து, கப்பலின் பயணப் பாதை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக MV Star Line கப்பலைத் தொடர்புகொண்டுள்ளனர்.

ஆவணங்களில் முரண்பாடு!

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கப்பலின் ஆவணங்கள் மற்றும் அதில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகள் தொடர்பாகப் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, Koarmada I தலைமையகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு, KRI Sigalu கப்பலின் தளபதி, MV Star Line கப்பலில் விரிவான சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடத்தப்பட்ட சோதனையில், அந்தச் சரக்குக் கப்பலில் மொத்தம் 36 கன்டெய்னர்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் 15 கன்டெய்னர்களில் சோடியம் பெர்குளோரேட் ரசாயனம் நிரப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

100 ஏவுகணைகள் தயாரிக்கப் போதுமான ரசாயனம்!

இந்த 15 கன்டெய்னர்களில் இருந்த ரசாயனத்தின் மொத்த எடை சுமார் 405 டன் என ரியர் அட்மிரல் டென்னி செப்டியானா தெரிவித்துள்ளார். மேலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த அளவிலான ரசாயனத்தைக் கொண்டு சுமார் 100 ஏவுகணைகளைத் தயாரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், வங்கதேசத்திடம் தற்போது முழுமையான ஏவுகணைகளைத் தானாகவே தயாரிக்கும் திறன் இல்லை என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.