திருப்பரங்குன்றம் விவகாரம்: திருமாவளவன் ஆவேசப் பேச்சு!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், புதிய இடத்தில் தீபம் ஏற்றும் முயற்சியை எதிர்ப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழர் ஒற்றுமை மரபைப் பாதுகாக்க வலியுறுத்தியும், உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரியும், சைவ ஆகம கோவில் மரபைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அமைதி நல்லிணக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், SDPI, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தாலும் களத்திற்கு வந்திருப்போம்!

“பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தாலும், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறைக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரணிக்கும், ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் களத்திற்கு வந்திருப்போம். கைது செய்யப்பட்டிருப்போம். அந்த வகையில்தான் எங்களது ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மாறினாலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மாறவில்லை. கடந்த திமுக அரசும், தற்போதைய அரசும் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அரசு பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக முடிவெடுக்கிறதா அல்லது சிறுபான்மை சமூகத்தினருக்காக இந்த நிலைப்பாட்டை எடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்க வேண்டும்.

இது பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரச்சினை அல்ல. காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறை எதுவோ, அதற்கு ஏற்ற வகையில் அரசின் நிலைப்பாடு இருக்க வேண்டும். உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் பாரம்பரியமாகத் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. புதிதாக மற்றொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலைப்பாடும் இதுதான்.

இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கூடவில்லை!

நாங்கள் இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கூடவில்லை. இந்துக்களுக்கும், சங்கிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. நாங்கள் விமர்சிப்பது அரசியல் நோக்கத்துடன் செயல்படுபவர்களைத்தான். முருக பக்தர்களையோ, கார்த்திகை தீபத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களையோ எதிர்க்கவில்லை. இந்தப் பிரச்சினை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அப்போது சங்கிகள் இருந்தார்களா? இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்சினை இருந்தது. அப்போது பிரச்சினை தீபம் ஏற்றுவது தொடர்பானதாக இல்லை; நில உரிமை தொடர்பானதாக இருந்தது.

திருப்பரங்குன்றம் மலையின் நில உரிமை விவகாரம்!

திருப்பரங்குன்றம் மலை 172 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மலையின் உச்சியில் தர்கா உள்ளது. மலையின் நடுப்பகுதியில் பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் ஆகியவை உள்ளன. மலையடிவாரத்தில் இருந்து தர்கா மற்றும் கோயில்களுக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒரே பாதையாகவும், அதன்பிறகு கோயிலுக்கும் தர்காவுக்கும் செல்லும் வகையில் இரு பாதைகளாகவும் பிரிகின்றன. 172 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலையில் கோயிலுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு? தர்காவுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு? எஞ்சிய நிலம் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட கேள்வி.

சிக்கந்தர் பாதுஷா என்ற சூபி 600 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட இடமே தர்காவாக உள்ளது. அந்த இடத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும், அங்கு செல்வதற்கான படிக்கட்டுகளையும் இஸ்லாமியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தர்கா அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட 33 சென்ட் நிலம் தொடர்பாக உரிமை கோரப்படுகிறது. அதே மலையில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும் அமைந்துள்ளன. தமிழர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் எனப் பல்வேறு தரப்பினரின் வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட சிறப்புமிக்க மலையாகத் திருப்பரங்குன்றம் திகழ்கிறது.

இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டவோ, வேறு எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவோ முடியாது. எனவே, தொடக்கத்தில் இருந்தே இந்தப் பிரச்சினை நில உரிமை மற்றும் வழிபாட்டுப் பாதை தொடர்பானதாகவே இருந்து வருகிறது. 1923-ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 1931-ஆம் ஆண்டு லண்டனிலும் வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை.

தீபத்தூண் விவகாரம் 1990-ல் எழுப்பப்பட்டது!

இன்று அரசு எடுத்திருக்கிற நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு கடந்த திமுக அரசு எடுத்த நிலைப்பாடுதான். ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசின் முடிவு மாறவில்லை. பெரும்பான்மை, சிறுபான்மை என்பது அல்ல. காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறை எதுவோ, அந்த நடைமுறைக்கு ஏதுவாக அரசு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

திமுக ஆட்சியின் போதும் சரி, தவெக ஆட்சியின் போதும் சரி, இரண்டு அரசு தரப்பு சார்ந்தவர்களும் ஆட்சியாளர்களும் எடுத்திருக்கிற முடிவு, காலம் காலமாக வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவதுதான் நடைமுறை. புதிதாக இன்னொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்பதுதான் அரசு நிலைப்பாடு. நில உரிமை தொடர்பான பிரச்சினைதான் முதலில் இருந்தது. 1931-இல் லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பளித்தது. அப்போதெல்லாம் தீபம் தொடர்பான பிரச்சினையே கிடையாது. இப்போது சர்வேக்கல்லா? தீபத்தூணா? என்று சொல்லக்கூடிய தீபத்தூணைப் பற்றி யோசிக்கவே இல்லை. இந்தப் பிரச்சினையை இந்து முன்னணி 1990-இல் திடீரெனக் கிளப்புகிறார்கள். இந்தத் தூண் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டது; அங்குதான் தீபம் ஏற்றுவோம் எனக் கூறினார்கள்.

தூணில் தீபம் ஏற்றுவது சாத்தியமா?

அந்தத் தூண் பாதுகாப்பான இடம் கிடையாது. அந்தக் கல் அடிப்பகுதி, நுனிப்பகுதி தீபம் ஏற்றத் தகுதி வாய்ந்ததா? என விவாதத்துக்கு உட்பட்டது. 400 லிட்டர் நெய் ஊற்றி, பல மீட்டர் காடா துணியால் திரி செய்து தான் தீபத்தை ஏற்றுவார்கள். அப்படி ஏற்றினால்தான் அடிவாரத்தில் உள்ள மக்களுக்கு அது தெரியும். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுகிறார்கள். எந்த ஒரு மலை உச்சியிலும் தீபம் ஏற்றினால் அது மகா தீபம். இங்கு மகா தீபம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் இருக்கிற தீப மண்டபத்தில் ஏற்றப்படுகிறது. வெட்ட வெளியில் காற்று அடிக்கும்; அது தொடர்ந்து எரிய முடியாது. அவ்வளவு பெரிய தீபத்தை ஏற்றுகிறபோது அதனைத் தாங்குகிற வலிமை இந்தத் தூணுக்கு இல்லை. தூண் இடிந்துவிடும், வெடித்துவிடும். இவர்கள் சொல்லுகின்ற தூண் தீபம் ஏற்றுவதற்குத் தகுதியே இல்லாத ஒரு தூண். அதில் தீபமே ஏற்ற முடியாது. வீம்புக்கு வம்பு இழுக்கிறார்கள்.

இதனை நீதிமன்றத்திலேயே கேள்வியாக எழுப்பிவிட்டார்கள். அதற்கு என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் சிறியதாக ஏற்றுகிறோம் எனக் கூறுகிறார்கள். அது தீபத்தூண் இல்லை. அதை எப்படி தீபத்தூண் எனச் சொல்கிறது? அது சர்வேக்கல் அல்ல. சர்வேக்கல்லில் குழி இருக்காது; இதில் குழி இருக்கிறது என்கிறார்கள். தீபத்தை வைப்பதற்கு அந்தக் குழி தோண்டப்பட்டதா அல்லது சர்வே கருவியை வைப்பதற்கு அந்தக் குழி தோண்டப்பட்டதா? வேறு ஏதாவது காரணத்திற்காக இடைக்காலத்தில் யாராவது அதில் பள்ளம் தோண்டினார்களா? இதுதான் ஆய்வுக்கு உட்பட்டது.

கல் தூணில் உள்ள பள்ளம் குறித்து கேள்வி!

அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு சொல்லிவிட்டார்கள் என்றால், உயர்நீதிமன்றத்தில் சொன்னதையோ சாமிநாதன் கண்டுபிடிப்பையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்குத் தடை விதிக்கிறோம். இவர்கள் விஞ்ஞானி போலக் கண்டுபிடித்து தீபத்தூண்தான் என்றார்கள். அதனைத் தீபத்தூண் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள், நாங்கள் இதுவரையிலும் எங்களுக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இந்தத் தூணில் தீபம் ஏற்றியதே இல்லை என அவர்களே சொல்லியிருக்கிறார்கள். தீபமேற்றுவதற்கு 5 சென்டிமீட்டர் முதல் 6 சென்டிமீட்டர் ஆழம் வேண்டும். சர்வே கருவி வைக்க வேண்டும் என்றால் ஒரு சென்டிமீட்டர் பள்ளம் இருந்தால் போதும். அந்தப் பள்ளத்தை யார் ஆய்வு செய்வது? அது ஒரு அறிவியல்பூர்வமான முடிவு.

மத மோதலை உருவாக்க முயற்சி!

வம்பை இழுக்கிறவர்கள் சங்கிகள். கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையான முருக பக்தர்கள் கிடையாது. உண்மையிலேயே கார்த்திகை தீபம் ஏற்றக்கூடியவர்கள் இல்லை. இந்துக்களாக உணரக்கூடிய இந்து மக்கள் பிரச்சினை எழுப்பவில்லை. அவர்களும் இந்தக் கோரிக்கையை எழுப்பவில்லை. நிலம் சம்பந்தமான கோரிக்கை எழுப்பினார்கள். அது 100 ஆண்டு காலப் பிரச்சினை; அது வேறு. தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சினையை அந்தக் கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த எவரும் எழுப்பவில்லை. எழுப்புகிறவன் யார் என்றால், அப்பட்டமான சங்கி கும்பல். இவர்கள் இந்தியா முழுவதிலும் இப்படித்தான் பிரச்சினையைச் செய்து வன்முறைகளைத் தூண்டி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் அவர்களின் நோக்கம்.

பல முயற்சிகளைத் தமிழ்நாட்டில் எடுத்துப் பார்த்தார்கள். அவர்கள் முயற்சி எடுபடவில்லை. தமிழ்நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த முடியவில்லை. அதற்காகத்தான் இப்போது சாதிய அரசியலைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் அதனைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலே ஒரு மோதலை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பரவும் மதுரையை அதற்காகக் களமாக மாற்றப் பார்க்கிறார்கள். எனவே, அந்தத் தூணில் செய்யப்பட்டிருக்கிற பள்ளம் சர்வே கருவி வைப்பதற்கானதா அல்லது தீபம் ஏற்றுவதற்கானதா மகா தீபம் ஏற்றப்போவதில்லை என்கிறபோது, மகா தீபம் தானே மக்கள் வழிபாடு செய்வதற்கானது? சிறிய தீபம் ஏன் ஏற்ற வேண்டும்? அதற்கான அவசியம் என்ன வந்தது? அதற்கான தேவை என்ன வந்தது? ஏனென்றால், மக்களிடம் பகைமையை ஏற்படுத்த வேண்டும். இதுதான் பொதுமக்களிடம் எழுப்பும் கேள்வி.

கடவுள் நம்பிக்கையும் மக்களின் உணர்வுகளும்!

மக்களைப் பிளவுபடுத்திவிடுகிறார்கள். அதில் சிக்கிக்கொள்ளாதீர்கள். இங்கு கூடியிருக்கக்கூடிய யாரும் இந்துக் கடவுளுக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களின் உணர்வுகளை மதிப்பது என்பது வேறு; கடவுள் மறுப்பு என்பது வேறு. என்னை யாரும் கோவிலுக்கு அழைத்தால் செல்வேன். என் மீதான நம்பிக்கையை வைத்து, மரியாதை வைத்து அழைக்கிறார்கள். எனது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவோடு இரவாக வந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டு வந்தேன். எத்தனையோ கும்பாபிஷேகத்தை நான் நடத்தி வைத்துள்ளேன். என் தாய்க்கு நம்பிக்கை உள்ளது. என் தம்பிகளுக்கும் உறவுகளுக்கும் நம்பிக்கை உள்ளது. அவர்களது உணர்வுகளை நான் கொச்சைப்படுத்தவில்லை.

எனக்குப் புண்ணியம் கிடைக்க வேண்டுமெனப் போகவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்காகப் போகிறேன். கார்த்திகை தீபம் ஏற்றுவதில் உடன்பாடு உள்ள மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். வழக்கமாக எந்த இடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டதோ, அந்த இடத்தில் ஏற்ற வேண்டும். தீப மண்டபம்தான் என்று சொல்ல முடியும். தீப மண்டபத்தில் அடித்தளம், உயரம் அமைத்து கொப்பரை வைப்பதற்கான அகலம் உள்ளது. நாங்கள் யாரும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. வழக்கமான இடத்தில், நூறாண்டுகளுக்கு மேலாக ஏற்றி வரும் இடத்தில் ஏற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழ்நாடு அரசும் அதைத்தான் கடந்த ஆட்சியின் போது செய்தது; இந்த ஆட்சியின் போதும் செய்கிறது. இதைத் தாண்டி உச்சநீதிமன்றம் இப்படி ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது ஏற்புடையது அல்ல. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து விமர்சனம்!

CISF-ஐ பயன்படுத்திக் கொள்ளுங்கள் என சுவாமிநாதன் சொன்னதை உச்சநீதிமன்றம் சொல்கிறது. இதுதான் சங்கிகளின் சிந்தனை; ஒரே மாதிரியாக உள்ளது. அதே நிலைப்பாட்டை இரண்டு நீதிபதிகளும், தனி நீதிபதி சொன்னதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என இடைக்காலத் தடை விதிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, எந்த அடிப்படையில் ஒரு முறை ஏற்றிக்கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்கள்? வியப்பாக உள்ளது. பாபர் மசூதி தீர்ப்பு சொன்னார்களே, அதேபோல இந்து கோவில் உள்ள அடையாளம் இல்லை எல்லாம் சொல்லிவிட்டு, ஆனாலும் இங்கேதான் ராமர் கோவில் கட்ட வேண்டும் எனக் கூறினார்கள். உலகத்தில் எங்காவது இப்படி நீதிமன்றத்தில் தீர்ப்பு வருமா?

போராடிப் போராடி நீதியை வென்று தலைநிமிர்ந்து இருக்கிறபோது, நீதிமன்றத்தின் துணையோடு வந்து அதனைக் காலி செய்துவிடுவார்கள் ஆரியர்கள் எனப் பெரியார் அப்போதே சொன்னார். போராடி உரிமை பெற்றால் அதனைக் காலி செய்வதற்கு நீதிமன்றத்தின் துணையைப் பெறுகிறார்கள். அதுதான் நடந்திருக்கிறது. சுவாமிநாதன் எப்படி சிஐஎஸ்எஃப் நாடச் சொன்னாரோ, உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தமிழ்நாட்டுப் போலீஸ் ஒத்துழைக்க மாட்டார்கள், தமிழ்நாடு அரசு ஒத்துழைக்காது என்றால் நீங்கள் சென்று CISF துணையுடன் ஏற்றலாம் என்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாடு அரசு ஒருவேளை நாங்கள் இதில் தலையிட மாட்டோம் என்று அமைதியாக இருந்து, அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வரும் எனப் பயப்படுவார்கள். அந்த மாதிரியான நேரங்களில் நாங்கள் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துகிறோம் என முயற்சி எடுத்தால் என்ன ஆவது? ஒரு செய்தியைச் சொல்கிறேன். அந்த மாதிரி நிலைமை வந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வன்முறையைக் கட்டவிழ்த்துவிட வாய்ப்பு இருக்கிறது.

நான் சொல்வது ஏற்றுங்கள் என அர்த்தம் அல்ல. விசிகவிற்கு அதில் உடன்பாடு இல்லை. முழுமையாக அதனை எதிர்க்கிறேன். அது வழக்கத்திற்கு மாறான ஒரு நிலைப்பாடு. பாரம்பரியமாக ஏற்றப்பட்ட இடத்தில், ஒரே இடத்தில் ஏற்ற வேண்டும். இரண்டு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டிய தேவை இல்லை. திடீரென எதிரான நிலைப்பாட்டை எடுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அன்றைக்கும் அன்றைக்கும் அப்படித்தான், என்றைக்கும் அப்படித்தான். திருமாவளவன் எப்போதும் இப்படித்தான் என்கிற கருத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்!

நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி பிரதிபலன் வராத முயற்சி. தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக இருக்கச் செய்ய வேண்டும். மதவெறிக் கும்பலுக்கு இடம் தந்துவிடக்கூடாது. மதத்தின் பெயரில் இங்கு வன்முறை வெடித்துவிடக்கூடாது. மதத்தின் பெயரால் தமிழ் மக்கள் பிளவுபடக்கூடாது என்பதற்காக இந்தக் கூட்டமைப்பு மாபெரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இன்னும் உங்களோடு சிறுத்தைகள் உற்ற துணையாக இருப்போம். தமிழ்நாடு அரசும் துணிந்து இப்போது இருக்கிற நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டும். இந்தக் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுக்குத் துணை நிற்கும். இந்த நிலைப்பாட்டில் எந்தப் பின்வாங்கலும் தேவையில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு யார் மீது? மாவட்ட ஆட்சியரை அழைப்பார்கள். மாவட்ட ஆட்சியரைக் காப்பாற்றுவதற்கு மக்கள் இருக்கிறோம். இந்தக் கூட்டமைப்பு இருக்கிறது. நாங்கள் இருக்கிறோம் என்கிற உறுதியைத் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்து மக்களே, உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம். இது இந்துக்களுக்கு எதிரானதல்ல; சங்கிகளுக்கு எதிரானது. இது தமிழர்களின் ஒற்றுமைக்கானது. ஆகவே, தமிழ்நாடு அரசு எடுக்கிற இந்த நிலைப்பாடு, இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். அதற்கு இந்தக் கூட்டமைப்பு துணை நிற்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.