மாணவர்களிடையே எழுந்த புகார்கள்!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலான (NCERT) பாடப்புத்தகங்களின் அச்சுத் தரம் குறித்து நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, புத்தகங்களில் எழுத்துகள் தெளிவின்றி மங்கலாக இருப்பது, மிகச்சிறிய எழுத்துருக்கள் மற்றும் அச்சிடுவதில் உள்ள முரண்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் புகார் தெரிவித்து வந்தனர். இதில், 10ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் உள்ள எழுத்துகள் மிகவும் சிறியதாகவும், தெளிவற்றும் இருப்பதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தனது ஒப்பந்தத்தின் கீழ் புத்தகங்களை அச்சிடும் நிறுவனங்களுக்கு NCERT கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அச்சகங்களுக்கு கடும் எச்சரிக்கை!
நவம்பர் 23ஆம் தேதி NCERT-யின் வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், பாடப்புத்தகங்களின் தரம் குறித்துப் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புத்தகங்களின் ஒட்டுமொத்த தரமும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் பாதிக்கப்படுவதுடன், NCERT அமைப்பின் நற்பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும் அனைத்து அச்சகங்களும் NCERT நிர்ணயித்துள்ள தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், தரநிலைகள் மற்றும் உற்பத்தி வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அச்சிடுதல், வண்ணங்களின் தரம், எழுத்துகளின் சீரமைப்பு, புத்தகங்களின் இறுதிக்கட்ட வேலைப்பாடுகள், பைண்டிங் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உயர் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் ரத்து; கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்!
புத்தகங்கள் அச்சிடப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் ஆய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்றும் NCERT தெரிவித்துள்ளது. இதற்காகப் போதுமான நவீன இயந்திரங்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் முறையான தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை அச்சகங்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஒப்பந்த விதிமுறைகளை மீறுவது, தரக்குறைவான புத்தகங்களை வழங்குவது அல்லது தரத்தைப் பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவது தீவிரமாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிமீறல்களின் தன்மையைப் பொறுத்து அபராதம் விதித்தல், புத்தக விநியோகத்தை நிராகரித்தல், ஒதுக்கப்பட்ட பணிகளை ரத்து செய்தல், ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், அங்கீகாரத்தை ரத்து செய்தல் மற்றும் கறுப்புப் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் புகார்!
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், தனது 10ஆம் வகுப்பு படிக்கும் மகனின் NCERT வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் உள்ள அச்சுப் பிழைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் புகார் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், புத்தகத்தில் உள்ள எழுத்துகள் மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும், மோசமான தரத்தில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் மாணவர்கள் புத்தகங்களைப் படிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், கண் சோர்வு, தலைவலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், கணிதப் பாடப்புத்தகங்களில் சில கணிதக் குறியீடுகள் விடுபட்டிருப்பது உள்ளிட்ட அச்சு முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டிய அவர், மாணவர்கள் எளிதாகப் படிக்கும் வகையில் எழுத்துருக்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அச்சகத்திற்கு அபராதம் விதித்த NCERT!
இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையே NCERT விளக்கம் அளித்தது. புகார்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தவறு செய்த அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கறிஞர் வினீத் ஜிண்டாலுக்கு அளித்த பதிலில், தரமற்ற 10ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகங்களை அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக NCERT தெரிவித்துள்ளது. மேலும், தனது ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும் அனைத்து அச்சகங்களுக்கும் புதிய அறிவுறுத்தலையும் வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகங்களை உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஸ்ரீஜி எண்டர்பிரைசஸ் (Shriji Enterprises) நிறுவனம் அச்சிட்டுள்ளது. இந்தப் பாடப்புத்தகம் முதன்முதலில் மார்ச் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில், கடைசியாக ஜனவரி 2026ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட அச்சகத்திற்கும் NCERT அதிகாரிகளுக்கும் அபராதம் தொடர்பான கூடுதல் விவரங்களைக் கேட்டு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
நாடு முழுவதும் 97 அச்சகங்கள்!
CBSE பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்குத் தேவையான பாடப்புத்தகங்களைத் தயாரிக்க, நாடு முழுவதும் ஒப்பந்த அங்கீகாரம் பெற்ற ஆஃப்செட் அச்சகங்களை NCERT பயன்படுத்தி வருகிறது. மே 2026 நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய பட்டியலில் மொத்தம் 97 அச்சகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கோயல் ஆஃப்செட் ஒர்க்ஸ், மணிப்பால் டெக்னாலஜிஸ், ரெப்ரோ இந்தியா லிமிடெட், அமர் உஜாலா லிமிடெட் மற்றும் யுனிவர்சல் ஆஃப்செட் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.
டெல்லி-என்சிஆர், உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த அச்சகங்களின் அச்சிடும் மையங்கள் அமைந்துள்ளன. கல்வி சார்ந்த புத்தகங்களின் தரம் எவ்வித சமரசமுமின்றி பராமரிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ள NCERT, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அச்சகங்களும் இந்த அறிவுறுத்தலை மிக முக்கியமானதாகக் கருதி கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், “கல்வி வளங்களின் தரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை” என்றும் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.




