எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் அச. உமர் பாரூக் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நில அளவைக் கல்தூண் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணம்!
“மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஒருநாள் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில், மிக முக்கியமான வரலாற்று மற்றும் அறிவியல்பூர்வமான உண்மைகளை முன்வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது வழிபாட்டுத் தலமோ, தீபத்தூணோ அல்ல; அது முழுக்க முழுக்க ஆங்கிலேயர் காலத்து ‘நில அளவைக் கல்தூண்’ (சர்வே கல்) என்பது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்று மொத்தம் 800 நில அளவைத் தூண்கள் உள்ளன என்பதும், ஆங்கிலேயர் காலத்து நில அளவீட்டு ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை ‘சிக்கந்தர் நில அளவீட்டு மையம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதும் ஆவணப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலையிலிருந்து நாகமலை, சதுரகிரி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பெருமாள் மலை உள்ளிட்ட 7 நில அளவீட்டு மையங்களுக்கான திசைக்கோணங்கள் டி.ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் ஆய்வுகள் மூலம் அளவிடப்பட்டு, அவை ஆங்கிலேயர் காலத்துப் பதிவுகளோடு துல்லியமாக ஒத்துப்போவது அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் கல்தூண் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ள வட்டம் மற்றும் மையப்புள்ளி அடையாளங்கள் அனைத்துமே நில அளவீட்டுப் பணிகளுடன் தொடர்புடையவை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து விமர்சனம்!
இதற்கிடையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துவிட்டு, அதே உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்பது நீதிபரிபாலன முறைக்கு எதிரானதாகவும், சட்ட அடிப்படை குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ள இந்த முழுமையான அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில், மதவாத சக்திகளின் நோக்கங்களுக்கு இடமளிக்காமல், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்.
மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!
வடமாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் இல்லாத புதிய வழக்கங்களை உருவாக்கி, அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயலும் மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளைத் தமிழக அரசு உறுதியுடன் முறியடிக்க வேண்டும். தமிழகத்தின் மதநல்லிணக்கத்தை உறுதியாகப் பாதுகாக்கும் வகையில், முந்தைய அரசுகள் காட்டிய அதே உறுதியான நிலைப்பாட்டைத் தற்போதைய தமிழக அரசும் மேற்கொண்டு, திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக ஏற்றப்படும் வழக்கமான இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




