பதவிகள் வேண்டாம்…அதிமுக உறுப்பினராக தொடர்கிறோம் – எஸ்.பி.வேலுமணி பேட்டி!

கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே எடப்பாடிக்கு கடிதம் எழுதினோம் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அந்தந்த மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள், எம்.ஜி.ஆர், அம்மா காலத்தில் இருந்து உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உழைத்தவர்களுக்கு எல்லாம் பதவி வழங்கப்படவில்லை. கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே எடப்பாடிக்கு கடிதம் எழுதினோம். கடிதத்திலேயே தெளிவாக உள்ளது.

அதனால் நான், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரும் பதவிகள் வேண்டாம், தொண்டராக தொடர்கின்றோம் என சொல்லி இருக்கின்றோம். அதிமுக உறுப்பினராக தொடர்கிறோம். மகளிரணி கூட்டத்திற்கு வளர்மதி எப்பொழுதும் கூப்பிடுவார். நேற்றைய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை. ஆனால் அதற்கு முன்னரே நாங்கள் கடிதம் கொடுத்து விட்டோம். அதனால் எங்களை கூப்பிடவில்லை.

நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு. கட்சிக்காக எம்.ஜி்.ஆர். ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள், எடப்பாடிக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன். கடந்த நான்காம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கொடுக்கவில்லை. அவர்களிடமே பதில் கேளுங்கள். எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.