ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து விசாரித்து, ஆலோசனை மேற்கொள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் 5 பேர் கொண்ட குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.இந்த குழு இன்று மாலை சென்னை வருகிறது.
இந்நிலையில் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்ல, தாம்பரம் ரயில் நிலையத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள் : வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பீகார் மாநில குழு இன்று சென்னை வருகை
அப்போது, மார்ச் 8 ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள், அதனை முன்னிட்டே தங்களது சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதாக விளக்கம் அளித்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ஜஷித் நகருக்குச் செல்ல இருப்பதாகவும் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.







