“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!

வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு எனவும், சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில்…

வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு எனவும், சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது மட்டுமின்றி, 16 மக்களவைத் தொகுதிகளை வென்று மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘கிங் மேக்கர்’ கட்சியாக தெலுங்கு தேசம் உருவெடுத்துள்ளது. இந்த சூழலில் பாஜகவின் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து வாக்குறுதி குறித்துப் பேசிய நாரா லோகேஷ்,

“ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாங்கள் தொடரவே போகிறோம். இடஒதுக்கீடு என்பது திருப்திர்படுத்தும் அரசியல் இல்லை. ஆந்திராவில் சிறுபான்மையினரின் தனிநபர் வருமானம் மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு அரசின் பொறுப்பு வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது தான். எனவே, இது திருப்திப்படுத்தும் அரசியல் இல்லை. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் அரசியல். சமூக நிதியை நிலைநாட்டவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற விரும்பினால் நாம் யாரையும் புறந்தள்ளிவிட முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற முடியும். அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வதே தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாடு. அதுவே எப்போது தொடரும். என்டிஏ கூட்டணியில் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். வலுவான மாநிலங்கள் இணைந்தே வலுவான நாடுகளை உருவாக்குகின்றன.

ஆந்திர மாநிலம் 1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் எப்போதும் இந்த பதவி வேண்டும், அந்தப் பதவி வேண்டும் எனக் கேட்டதே இல்லை. மாநிலத்திற்கு அதிக நிதி தேவை என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அமைச்சர் பதவிகளில் எங்களுக்கு ஆர்வம் இல்லை, மாநில நலனே முக்கியம்” என்று நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.