“திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்” – தவெக தலைவர் விஜய்!

இந்த தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நிறைவு செய்தார். இந்த நிலையில் சென்னை நந்தனம் திடலில் தவெக தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். அப்போது பேசியவர், “மிகமிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப் போகின்ற தேர்தலின் கடைசிப் பிரசாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப் போகின்ற கடைசிப் பிரசாரம். மக்களை கண்டுக்காத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிற கடைசி பிரசாரம்.

பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி, அவருடைய வாழ்க்கையை உயர்த்தியுள்ளார். வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி, விலைவாசி உயர்வு என மக்கள் பிரச்னைகளை உயர்த்தியுள்ளார். கடன் சுமையையும் உயர்த்தி வைத்துள்ளார். நமது அரசியல் எதிர் திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலையில் இருந்து இதுவரை மாறவில்லை. தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை யாரும் நாசம் செய்ய முடியாது. தவெக நிலைப்பாட்டில் ஒரு இன்ச் கூட மாறவில்லை. மதசார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் இருந்து மாற மாட்டோம். இந்த விஷயத்தில் 100 சதவிகிதம் விஜய்யை நம்பலாம். எம்மதமும் நம்மதம் என்பதுதான் விஜய்யின் முகம். சிங்கம் எப்போதும் சிங்கம்தான். தனியாக வந்தாலும் தண்ணீ காட்டிவிடும்.

சிறுபான்மையினர் வாக்குக்காக கோடிக் கணக்கில் செலவிட்டு காங்கிரஸை வாங்கிக் கொள்ள வேண்டியது. கட்சியைக் காப்பாற்ற பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி. ஒரு பக்கம் கதர் வேடம், மறுபக்கம் காவி வேடம். பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி என நான் அன்றே கூறியதை தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். இந்த தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி. தேர்தல் தோல்விக்குப் பிறகு திருட்டு வழக்கு, கொள்ளை வழக்கில் இருந்து காப்பாறிக் கொள்ள மோடி மற்றும் அமித் ஷா காலில் திமுக விழும்”.

“தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி, கடன் சுமையை உயர்த்தி உள்ளனர். இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்வி கடனையாவது ரத்து செய்து இருக்கலாம். கருத்து கணிப்பு என்ற பெயரில் கடுப்பில் கணிப்புகளை வெளியிடுகின்றனர். திமுக 300 சீட்டு, 200 சீட்டு என்று கடுப்பில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று 10 முறை தோற்ற சேலத்துக்காரர் சொல்கிறார்.

உங்களால் சேலத்தை தாண்டி வேறு தொகுதியில் போட்டியிட முடியுமா? சட்டமன்றத் தேர்தலில் இந்த இரண்டு பேருமே வேண்டாம். இது ஒரு மாற்றத்திற்கான தேர்தல். மாற்றி, மாற்றி வாக்கு செலுத்துவது மாற்றமில்லை. புதிதாக ஒருவரை கொண்டு வருவது தான் மாற்றம். ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து ஒருவனை எதிர்க்க காரணம், எல்லாரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். வாகை சூடும் வரலாறு திரும்பப் போகும் தேர்தல் இது. இந்த தேர்தலில் 75 வருட பவள விழா பாப்பாவையும், 55 வருட பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி எறிவோமா? திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம். அனைவரும் ஒரே கூட்டணியில் இருந்து ஒருவனை மட்டுமே எதிர்க்கிறார்கள். கரூர் சம்பவத்தில் என் மீது பழியை போட்டனர். போலீசார் அனுமதி கொடுத்த நேரத்தில் நான் கரூரில் இருந்தேன். கரூருக்கு செல்லும் வழியில் காத்திருந்த மக்களை பார்க்காமல் அப்படியே வந்து விட முடியுமா? கரூரில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் உங்கள் அடிமையை கரூரில் இருந்து ஏன் கோவைக்கு அனுப்பினீர்கள்?

நாளை மறுநாள் ஏப்ரல் 23ம் தேதி காலையிலேயே தயாராகி, வீட்டில் இருக்கும் சாமியை கும்பிட்டு விட்டு உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் எல்லாரையும் கூப்பிட்டு சென்று விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல். ஒருநாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். இங்கு 2 முனைப் போட்டிதான். ஒன்று தவெக, இன்னொன்று திமுக. உங்கள் விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.