மத்திய அரசின் முக்கியச் சட்ட விவகாரங்களைக் கையாள்வதில் முதன்மைப் பங்கு வகிக்கும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில், அவரது சிறப்பான பணிகளைக் கருத்தில் கொண்டு, வரும் 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும் 3 ஆண்டுகளுக்குப் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு சொலிசிட்டர் ஜெனரலாக முதன்முதலில் பொறுப்பேற்ற துஷார் மேத்தா, ஏற்கனவே 8 ஆண்டுகள் இப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். தற்பொழுது வழங்கப்பட்டுள்ள புதிய 3 ஆண்டுகள் நீட்டிப்பின் மூலம், அவர் மொத்தம் 11 ஆண்டுகள் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றி, இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் இப்பதவியில் நீடித்தவர்களில் ஒருவர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, துஷார் மேத்தாவுடன் சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் ஐந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களின் பதவிக்காலத்தையும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒப்புதல் அளித்துள்ளது. விக்ரம்ஜித் பானர்ஜி (2026 ஜூலை 1 முதல் அமல்),கே.எம். நடராஜ் (2026 ஜூலை 1 முதல் அமல்), சூரியபிரகாஷ் வி. ராஜு (2026 ஜூன் 30 முதல் அமல்), என்.வெங்கடராமன் (2026 ஜூன் 30 முதல் அமல்), ஐஸ்வர்யா பதி (2026 ஜூன் 30 முதல் அமல்) மற்றொரு முக்கிய முடிவாக, டெல்லி உயர் நீதிமன்றத்திற்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றி வரும் சேத்தன் சர்மாவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்கால நீட்டிப்பும் வரும் 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் அல்லது அடுத்தகட்ட உத்தரவுகள் வரும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




