தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக , சிபிஐ , சிபிஎம் , ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்தன. இதனால் பெரும்பான்மை பெற்ற தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றத்தில் இன்று (மே.13) காலை 9 : 30 மணிக்கு தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சட்டமன்றத்தில் தவெகவின் பலம் என்ன…?
ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரிடம் 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து தவெக தலைவர் விஜய் ஆட்சியமைத்துள்ளார். அதன் படி தவெக – 107, காங்கிரஸ் – 5, விசிக -2, சிபிஐ – 2, சிபிஎம் – 2, ஐயுஎம்எல் – 2 என 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஆளும் அரசுக்கு உள்ளது.
இதற்கிடையெ திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏவுக்கு தடை விதித்துள்ளது.
அதே நேரம் மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ காமராஜ், நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயை ஆதரித்து பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சுயேச்சை எம்.எல்.ஏவாக அவர் தொடர்வார் என கூறப்படும் நிலையில் அவரும் தவெக அரசுக்கு வாக்களிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமின்றி உட்கட்சி மோதல் நிலவி வரும் அதிமுகவில் சி.வி. சண்முகம் தலைமையிலான 30 எம்.எல்.ஏக்கள் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடரும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.







