விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்து தொடர்பாக, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த போது நேற்று நடந்த பட்டாசு வெடி விபத்தில் 5 வயது குழந்தை மற்றும் 4 மாத கர்ப்பிணி பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து வெடிவிபத்து சம்பந்தமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வெடி விபத்தில் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடி விபத்து சம்பந்தமாக தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராம்ராஜ் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ராம்ராஜ் கூறும்போது, இதுபோன்று சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 5 வயது குழந்தை மட்டுமல்லாமல் 4 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், 4 மாத குழந்தை வயிற்றில் இருந்தாலும் அதுவும் எங்களுக்கு ஒரு உயிராகவே கருதப்படும் என்றும் இதனையும் சேர்த்து இரண்டு குழந்தைகள் இறந்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம், குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.







