நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் 249 ரன்கள் ஆல்-அவுட் ஆன நியூசிலாந்து 32 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. சுப்மன் கில் 8 ரன்களிலும், ரோகித் சர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 5வது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், Reserve Day ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6வது நாளான இன்றும் போட்டி நடைபெறவுள்ளது.







