முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் சேலம் மதுஅருந்துவோர்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, டாஸ்மாக் மதுக்கடையில், சமூக இடைவெளியின்றி திரளும் மதுஅருந்துவோர், மதுபாட்டில்களை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்கின்றனர்.

தமிழ்நாட்டில், தொற்று குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், அப்பகுதிகளைச் சேர்ந்த மதுகுடிப்போர், சேலம் – தருமபுரி எல்லைப்பகுதியில் உள்ள பொ.துறிஞ்சிபட்டி பகுதியில் செயல்படும் 2 மதுக்கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சமூக இடைவெளியின்றி திரளும் அவர்கள் மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், மதுபாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் கமிஷன் பெற்றுக் கொண்டு, மதுகுடிப்போர் கேட்கும் எண்ணிக்கையில் விற்பனையாளர்கள் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், மதுகுடிப்போர் டிராவல் பேக், சாக்குப் பைகள் ஆகியவற்றில் மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமூக இடைவெளியின்றி மது கடைகளில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குவிந்து வருவதால் தர்மபுரி மாவட்டத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றி காத்திருக்கும் மது பிரியர்களை காவல்துறையினர் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

பொம்மிடி அடுத்த பொ.துறிஞ்சிப்பட்டியில் மதுக்கடையில் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிவரும் மதுக்கடை ஊழியர்கள் மீதும் அதை வேடிக்கை பார்த்து நிற்கும் பொம்மிடி காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

Saravana Kumar

நியாய விலை கடைகளின் தரம் உயர்த்தப்படும்: முதலமைச்சர்

சட்டப்பேரவைத் தேர்தல்: மத்திய உள்துறை செயலாளரிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!

Saravana