சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா-வங்கதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 210 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அவருடன் கைகோர்த்து அபாரமாக ஆடிய விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 72வது சதத்தை பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப்(1,214 நாட்கள்) பிறகு விராட் கோலி சதமடித்துள்ளார்.
இன்று பதிவு செய்த சதத்தின்மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில், 71 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். 100 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








