இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சராக சுக்விந்தர்சிங் சுக்கு பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
68 தொகுதிகளை கொண்ட இமாசலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கடந்த 8ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இமாசலபிரதேச மாநிலத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை.
குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் இழந்த்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர்சிங் சுக்கு, மாநில முதலமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை, முதலமைச்சராக கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. சுக்விந்தர்சிங் சுக்கு, கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் 4 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில், சுக்விந்தர் சிங் முதலமைச்சராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சராக முகேஷ் அக்னி ஹோத்ரியும் நாளை பதவியேற்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







