இன்று 70வது பிறந்தநாள் காணும் தேமுதிக தலைவர் மற்றும் நடிகருமான விஜயகாந்தின் திரைப்பயணத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் இவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் என போற்றப்படுகிறார். மக்களின் பாசத்தையும் பேராதரவையும் தன் சிறப்பாக கொண்டவர். கேப்டன் பிரபாகரன் படம் மூலம் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த விஜயகாந்த், இன்றளவும் கேப்டன் என அன்புடன் அழைக்கப்படுகிறார். 1979ல் இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன விஜயகாந்த், சிவப்பாக இருந்தால் தான் சினிமாவில் பயணம் செய்ய முடியுமா கருப்பாக இருந்தாலும் திரைப்பயணத்தில் பயணிக்க முடியும் என்பதை தன் திறமையால் அடித்து நொறுக்கினார். இவர் அனைவரிடமும் எளிமையாக பழகும் குணம் கொண்டவர். இவருக்கு உடற்பயிற்சியில் தீவிர நாட்டம் உண்டு.
இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது தான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி, நெடுங்காலமாக கடனில் இருந்த நடிகர் சங்க கடனை அடைத்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள் மற்றும் ஓய்வூதிய திட்டத்தையும் அறிமுகம் செய்து வைத்தார். வில்லன்களை பின்னங்காலால் சுழற்றி அடிப்பது, போலீஸ் கெட்டப்பில் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பது என தனது ரசிகர்களை ஒவ்வொரு காட்சியிலும் குதூகலப்படுத்தினார். 40 வருட சினிமா பயணத்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கும் விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள், வைதேகி காத்திருந்தாள், ரமணா, வானத்தை போல போன்ற பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சினிமாவில் மட்டும் அல்ல, அரசியலிலும் கால் பதித்த விஜயகாந்த், 2005ம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். முதல் தேர்தலிலேயே தன் வெற்றியை பதிவு செய்தவர், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலேயே எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பேற்று, தமிழக அரசியல் ஆளுமைகளை தம்மை திரும்பி பார்க்க வைத்தார். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும், அனைவரிடமும் அன்பு பாராட்டியவர். இவரை போல திரையுலகில் யாரும் இல்லையெனக் கூறும் பலரின் வார்த்தைகள், விஜயகாந்த் யார் என்பதை காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும்.







