பீகாரில் ரூ.34,470 கோடி திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

பீகாரில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேலும் விரைவுபடுத்தும் வகையில், ரூ.34,470 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 21) தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

நிதிஷ் சேது பாலத்தைத் திறந்து வைக்கும் மோடி!

பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்போது, கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 19.7 கி.மீ. நீளமுள்ள 6 வழிச்சாலை கொண்ட நிதிஷ் சேது பாலத்தைத் திறந்து வைக்கிறார். சுமார் ரூ.4,280 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள கச்சி தர்காவையும் வைஷாலி மாவட்டத்தில் உள்ள பிடுபூரையும் ரகோபூர் தியாரா வழியாக இணைக்கிறது. இதில் 9.7 கி.மீ. நீளமுள்ள பிரதான பாலமும், 10 கி.மீ. அணுகுசாலைகளும் அடங்கும். பீகாரில் சாலை மற்றும் பாலப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பெயர் இந்தப் பாலத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது.

மோடியை வரவேற்கும் நிதிஷ் குமார்!

பாலத்தைத் திறந்து வைப்பதற்காக பாட்னா விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடியை, முன்னாள் முதலமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான நிதிஷ் குமார் நேரில் வரவேற்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இந்தப் பாலத்துக்கு நிதிஷ் குமாரின் பெயரைச் சூட்ட பிரதமர் மோடியே விருப்பம் தெரிவித்ததாகவும், பீகாரின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை மோடி மதிப்பதாகவும் அந்தத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இரு தலைவர்களும் சிறிது நேரம் கலந்துரையாடிய பிறகு, மோடி ஹெலிகாப்டர் மூலம் வைஷாலிக்குச் செல்ல உள்ளார். இருப்பினும், வைஷாலியில் நடைபெறும் பாலத் திறப்பு விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்கத் திட்டமிடப்படவில்லை.

ரூ.15,600 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

பீகாரில் ரூ.15,600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதில் அவுரங்காபாத் – சோர்தாஹா தேசிய நெடுஞ்சாலை 19-ன் 6 வழிச்சாலைப் பணி, சோர்மா – பைரகனியா தேசிய நெடுஞ்சாலை 227F மற்றும் உமாகான் – சஹர்சா தேசிய நெடுஞ்சாலை 327 உள்ளிட்ட சாலைத் திட்டங்கள் அடங்கும்.

மின்சாரத் துறையில், 1,320 மெகாவாட் திறன் கொண்ட பக்சார் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் திறனுடைய இரண்டாவது அலகைத் தொடங்கி வைக்கிறார். மேலும், மின் விநியோகம் மற்றும் மின்பரிமாற்றக் கட்டமைப்புத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதில் மின்சார இழப்பைக் குறைக்கும் வகையில் ரூ.1,130 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பணிகளும் அடங்கும்.

இதுதவிர, கால்வாய்கள் மற்றும் கரைகளைப் புதுப்பித்தல், நவாடாவில் உள்ள புல்வாரியா அணையில் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டம், கஹல்கானில் கழிவுநீர் கட்டமைப்புத் திட்டம் உள்ளிட்ட பணிகளும் தொடங்கி வைக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள், குடியிருப்புப் பள்ளிகள், சுகாதார மையங்கள், வேளாண்மை, விளையாட்டு மற்றும் அரசு நிர்வாகம் தொடர்பான கட்டடங்கள் மற்றும் வசதிகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

ரூ.14,450 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்!

மேலும், சுமார் ரூ.14,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் ரூ.3,800 கோடிக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படவுள்ள சாஹிப்கஞ்ச் – அரேராஜ் – பெட்டியா தேசிய நெடுஞ்சாலை 139W-ன் 4 வழிச்சாலைப் பணியும் முக்கியமானதாகும்.

அதேபோல், 2,400 மெகாவாட் திறன் கொண்ட பிர்பைன்டி சூப்பர் அனல் மின் திட்டத்துக்கான மின்சாரக் கடத்தல் கட்டமைப்புப் பணிக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.3,350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பெகுசராய், பீகார் ஷரீப், பூர்ணியா, ஹாஜிப்பூர், மோதிஹாரி, தனாபூர், ககாரியா, சமஸ்திபூர், புத்தகயா, சீதாமர்ஹி, சஹர்சா உள்ளிட்ட நகரங்களில் கழிவுநீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

கால்வாய் அமைப்புகளை நவீனப்படுத்துதல், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் குடியிருப்புப் பள்ளிகள், ஐஐடி பாட்னா ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் விடுதி, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள், அவசரகால மீட்பு மற்றும் காவல்துறை தரவு மையக் கட்டமைப்புகள் உள்ளிட்ட திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

26,900 பேருக்கு வீடு.. 100 மின்சாரப் பேருந்துகள் அறிமுகம்!

பிரதமர் ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் 26,900-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு வழங்கும் நிகழ்வான கிரஹ பிரவேஷ் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், பீகார் மாநிலத்தில் தூய்மையான பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் 100 PM-eBus மின்சாரப் பேருந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் உரையாற்ற விரிவான ஏற்பாடுகள்!

வைஷாலி மாவட்டம் ராஜபாகாட் பகுதியில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய மேடையுடன் பொதுமக்கள் அமர்ந்து உரையைக் கேட்பதற்காக 5 பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பந்தல்களில் குடிநீர், மின்விளக்கு, குளிரூட்டும் வசதிகள், ஒலிபெருக்கிகள் மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், விஐபி, விவிஐபி, பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனத் தனித்தனியாக நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் பயணத்தையொட்டி கச்சி தர்கா – 6 வழிச்சாலைப் பாலம் அருகே ஹெமத்பூர் கிராமத்தில் 3 ஹெலிபேடுகளும், ஜாபர்பட்டி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே 5 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பிற்பகல் 1.15 மணியளவில் நிதிஷ் சேது பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் ராஜபாகாட் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் செல்கிறார். அங்கு பிற்பகல் 2.30 மணி முதல் 3.15 மணி வரை பொதுமக்களிடையே உரையாற்றிவிட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் பாட்னாவுக்குப் புறப்படுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.