“மீனவர்களின் உரிமைக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்!” – மு.க.ஸ்டாலின் மீனவர் தின வாழ்த்து!

தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம் என மு.க.ஸ்டாலின் மீனவர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல், நீடித்த மீன்பிடிப்பை ஊக்குவித்தல் மற்றும் கடல் வளங்களைப் பராமரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக இன்று நாடுமுழுவதும் மீனவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மீனவர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர் தின வாழ்த்துகள்!

தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.

அத்தகைய மீனவ மக்களுக்காக நமது திராவிட மாடல் ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.

மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!

அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.