நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நாளை இந்தியா வருகை!

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை (நவ. 22) இந்தியா வருகிறார்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை (நவம்பர் 22) இந்தியா வருகிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேபாள பிரதமர் சந்திக்க உள்ளார்.

தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை (நவம்பர் 23) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் பாலேந்திர ஷா, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது, இந்தியா – நேபாளம் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.

இந்தியா – நேபாளம் இடையே வரலாறு, கலாசாரம், நாகரிகம் மற்றும் இரு நாட்டு மக்களிடையேயான நெருங்கிய தொடர்புகளின் அடிப்படையில் நட்புறவு நீடித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, எரிசக்தி, நீர்வளங்கள், போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் விளையாட்டு போன்ற புதிய துறைகளிலும் இரு நாடுகளின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கையின் கீழ், நேபாளத்துடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் வெளிப்படுத்துவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தப் பயணம் வாய்ப்பளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.