3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பாகிஸ்தான் அமைச்சர்!
டெல்லியில் உள்ள புரானா கிலா பகுதியில் முதலாவது SCO நாகரிக உரையாடல் மன்றம் நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக் தலைமையிலான குழு பங்கேற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கு வருகை தரும் முதல் பாகிஸ்தான் தலைவராகவும், 2025 மே மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட 4 நாள் ராணுவ மோதலுக்குப் பிறகு இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சராகவும் அவர் உள்ளார்.

உலக அமைதிக்கு கலாசார உறவுகள் முக்கியம்!
மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, உலக அமைதிக்கு கலாசாரத் தொடர்புகளே மிக வலுவான உத்தரவாதம் என்று குறிப்பிட்டார். மேலும், பேரரசுகள் உலக வரைபடத்தை மாற்றியிருக்கலாம். ஆனால், நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல்கள்தான் உலகின் சிந்தனை முறையை மாற்றியுள்ளன.
எனவே, SCO நாகரிக மாநாடு வெறும் சம்பிரதாய நிகழ்ச்சி அல்ல; உலகிற்கு வழிகாட்டும் தளமாகும் என்றார். உலகம் முழுவதும் போர் மற்றும் அமைதியின்மை குறித்த விவாதங்கள் மேலோங்கியுள்ள இந்தச் சூழலில், இந்தியா நாகரிக உரையாடல் மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. பதிலளிக்காத பாகிஸ்தான் அமைச்சர்!
மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக்கிடம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், இதற்கு நேரடியாகப் பதிலளிக்காத அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு விவகாரமாக மட்டும் இந்த விவாதத்தைக் குறுக்கிவிடக் கூடாது என்று தெரிவித்தார். ஈரான், மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பல்வேறு சவால்கள் உருவாகியுள்ளன.
எனவே, பிராந்திய அளவிலான விரிவான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். இந்தியா பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அவர், பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இரு தரப்பும் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்றும், வெளிப்படையான விசாரணை நடைமுறையை உருவாக்குவதன் மூலம் நம்பிக்கையை மீட்டெடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அமைச்சருக்கு அழைப்பு.. காங்கிரஸ் எதிர்ப்பு!
பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஸ்ரீநேட் தனது எக்ஸ் பதிவில், இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த ஒருவரை அழைத்ததற்காக மத்திய அரசு வெட்கப்பட வேண்டும் என்று விமர்சித்தார். மேலும், இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாத நிலையில், மோடி அரசு அவர்களுக்கு பிரியாணி மற்றும் கீர் வழங்கிக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் நளின் கோலி, பாகிஸ்தானுக்கு இந்தியா எந்தவிதமான சிறப்பு அழைப்பையும் விடுக்கவில்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதம் ஏவப்படும் வரை இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. இது பலதரப்பு மாநாடு மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்தார்.
கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க தொழில்நுட்பம்!
மாநாட்டில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சி உலகளவில் கலாசாரத் தொடர்புகளை மேம்படுத்தப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றார். டிஜிட்டல் தளங்கள் மூலம் அறிவுப் பகிர்வு, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை முன்பைவிட எளிதாகியுள்ளன. SCO நாடுகள் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், உறுப்பு நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான விலைமதிப்பற்ற பாரம்பரியங்களைப் பாதுகாத்து வருகின்றன. பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள், அரிய நூல்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் கலைப் படைப்புகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல தொழில்நுட்பம் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் தெரிவித்தார்.
நவம்பர் 22 வரை நடைபெறும் மாநாடு!
2026-27-ம் ஆண்டுக்கான SCO நாடுகளின் தலைவர்கள் குழுவுக்கு பாகிஸ்தான் தலைமை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா சார்பில் நவம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்தப் பலதரப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இதில் SCO உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் பேச்சுவார்த்தை கூட்டாளர் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, பிராந்தியத்தின் பொதுவான நாகரிகப் பாரம்பரியம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்து வருகின்றனர்.




