நடிகர் விஜயின் படத்தை பார்க்கச் சென்ற ரசிகர் விஜய்-க்கு கத்தி குத்து! மூன்று பேர் கைது ஒருவர் தலைமறைவு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திரையரங்கில் லியோ திரைப்படம் பார்த்த போது நடந்தேரிய கத்திகுத்து. மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.  தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் திரையரங்குகளில்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திரையரங்கில் லியோ திரைப்படம் பார்த்த போது நடந்தேரிய கத்திகுத்து. மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். 

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் திரையரங்குகளில்
திரையிடப்பட்டுள்ள நிலையில், அப்படத்தினைக் காண பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என  கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.  இத்திரைப்படம் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு (21.10.2023) இந்தப் படத்தை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையம், ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த விஜய்(23) சென்றுள்ளார்.

இதே படத்தை காண மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் தனது நண்பர்கள் மூவருடன் சென்றுள்ளார். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் உற்சாகத்தில் தியேட்டரில் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் எரிச்சல் அடைந்த விஜய், கூச்சலிட்ட  பிரபாகரன் மற்றும் அவனது நண்பர்களை தட்டிக் கேட்டுள்ளார்.  இதனால் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து, விஜயிடம் வாக்குவாதம் செய்தனர்.அப்போது அருகில் இருந்தவர்கள் இவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். இருப்பினும் படம் முடிந்து வெளியே வரும் போது மீண்டும் இவர்களுக்கிடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த பிரபாகரனும் அவரது நண்பர்களும் விஜயை அடித்து துன்புறுத்தியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் குத்தியுள்ளனர்.  இதனால் விஜயக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு விஜய் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கத்து குத்துக்கு உள்ளான விஜய் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன்,  உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  கத்தியால் குத்திய பிரபாகரன், அஸ்வின்,மாதவன் என 3 பேரையும் கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார்  தேடி வருகின்றனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kalaiselvi kannan.k

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.