துணை வேந்தர் நியமன வழக்கு ; உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ரத்து…..!

துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர்களை ஆளுநருக்குப் பதில், முதலமைச்சரே நியமிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது.

இதற்கிடையில் இச்சட்டமானது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும்உச்ச நீதிமன்றத்தில் மாற்ற கோரி தமிழ் நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில் இந்த இரண்டு வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் நாடு அரசு தரப்பில் துணை வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வானது, மாநில அரசு பதிலளிக்க கால அவகாசம் அளிக்கவில்லை எனவும் இந்த வழக்கில் அவசரமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் துணை வேந்தர் நியமன சட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தனர். அதே போல் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மெரிட் அடிப்படையில் 6 வாரத்தில் வாசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.