நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில படத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. அதனைத் தொடர்த்து மருத்துவப் படிப்பிற்கு சேருவதற்கான நீட் தேர்வு எழுத மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவடைந்துள்ளது. இதுவரை 6,412 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுத விண்ணப்பத்தில்லுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒரு அரசுப்பள்ளி மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதி வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு உள்ள நிலையிலும், மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








