நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என விசிக தலைவரும், மகக்ளவை உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த ஏ.கே. ராஜன் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தமிழக அரசு பொறியியல் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என கடந்த திமுக ஆட்சியில் தடை சட்டம் கொண்டு வந்து நுழைவுத்தேர்வை ரத்து செய்ததைப் போல், நீட் தேர்விற்கும் தடைச்சட்டம் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை திறப்பது என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது, எனவே பள்ளிகள் திறக்கும் எண்ணத்தை தமிழக அரசு ஒத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெரும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருவதாக கூறிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் என நினைப்பதாகவும், நாளை அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.







