“அரசுப்பள்ளி மாணவர்களை, ஊதியமில்லா ஊழியர்களாக நடத்தும் அவலம் எப்போது தான் மாறும்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

அரசுப்பள்ளி மாணவர்களை, ஊதியமில்லா ஊழியர்களாக நடத்தும் அவலம் எப்போது தான் மாறும்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த சில தினங்களுக்கு…

அரசுப்பள்ளி மாணவர்களை, ஊதியமில்லா ஊழியர்களாக நடத்தும் அவலம் எப்போது தான் மாறும்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“கடந்த சில தினங்களுக்கு முன்பு, தவெக அமைச்சர் தமிழன் பார்த்திபன் “குழந்தைகள் பள்ளிகளை சுத்தம் செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை” என்ற ரீதியில் பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணியில், அங்கு படிக்கும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

அதிலும் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பது கூட தெரியாமல், “எங்கள் தலைமை ஆசிரியர் தான் செய்ய சொன்னார், பள்ளியில் எப்போதுமே இந்த வேலையை நாங்கள் தான் செய்வோம்” என அப்பாவித்தனமாகக் கூறும் அம்மாணவர்களைக் காண்கையில் ஒரு தந்தையாக நெஞ்சம் கனத்துப் போகிறது. படிக்கும் பிள்ளைகளை, இப்படி துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதாபிமானமற்றது மட்டுமன்றி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

எனவே, முதல்வர் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அரசுப்பள்ளிகளில் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.