டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மேற்கொண்ட பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ளது. விட்டல் படேல் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சிஜேபி கட்சி சார்பில் செய்தி தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர்
பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிஜேபியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா கூறியதாவது, தர்மந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க, நாளை மதியம் வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது. அவரை விரைவில் அரசு பதவியிலிருந்து நீக்கும் என நம்புகிறோம். (தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு) இழப்பீடு வழங்குவது மற்றும் மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய இரண்டு கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை ரீதியான ஒப்புதலைத் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியதாவது: இந்தச் சந்திப்பு ஏறக்குறைய 2 மணி நேரம் நடைபெற்றது. தேர்வுகள் தொடர்பாக அவர்களிடம் 3 முக்கிய கோரிக்கைகளும், 5 சீர்திருத்தப் பரிந்துரைகளும் இருந்தன. அரசாங்க மட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்த விவரங்களை நாளை மதியம் அவர்களை மீண்டும் சந்தித்துத் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறியுள்ளோம்.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது பரவலான கண்டனங்களை பெற்று வருகிறது.




