தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் அருணாச்சலம் (வயது 24). இவர், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே, கடந்த 17-ம் தேதி தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தனிப்பிரிவு போலீசார் பிடித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 120 மதுப்பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அருணாச்சலத்தை போலீஸ் நிலைய ‘லாக் – அப்’பில் அடைத்து வைத்து இருந்தனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அவரது குடும்பத்தினர் தென்பாகம் காவல் நிலையத்துக்கு வந்த நிலையில், அருணாச்சலம் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். உடனடியாக அவரது பெற்றோர் அழைத்துச்சென்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, போலீசார் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் பேசிய வீடியோ வைரலானது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.




