கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து. அப்போது ஜூன் மாதம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்கியதே இருவரின் உயிரிழப்பிற்கு காரணம் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.
மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தை மற்றும் மகன் இருவரும் காவல்துறையினரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதே அவர்களின் மரணத்திற்குப் பிரதான காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய பால்துரை 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதன் படி மாலை 4 மணிக்கு இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







