வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. வாரிசு, துணிவு என இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இரண்டு படங்களின் டிரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அஜித், விஜய் படங்கள் வெளியாகும் போதெல்லாம் திரையரங்குகள் விழாக்கோலத்தில் காட்சியளிக்கும். அதேநேரத்தில் சில ரசிகர்கள் திரையரங்கில் ரகளைகளில் ஈடுபடுவதும் உண்டு.
தனித்தனியாக படம் வெளியானாலே பல்வேறு பிரசனைகள் வரும். தற்போது ஒரே நாளில் இரண்டு படங்களும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் என்ன செய்வார்களோ என திரையரங்கு உரிமையாளர்கள் பயத்தில் உள்ளனர்.
சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏராளமான நாற்காலிகள் உடைக்கப்பட்டு இருந்தது.
அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியான போது கோவையில் ஒரு திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மற்றொரு திரையரங்கின் திரை கிழிக்கப்பட்டது. தனித்தனியாக படங்கள் வெளியான போதே பல்வேறு பிரச்னைகள் வந்தன. இந்த நிலையில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் என்ன நடக்குமோ என திரையரங்கு உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
சர்ச்சைக்கு உள்ளாகும் திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்குமா பிரச்சினைகள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.







