இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பயமுறுத்துவது பாஜகவின் கொள்கை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையிலும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றும் திரட்டும் வகையிலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி “இந்திய ஒற்றுமை” நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் “இந்திய ஒற்றுமை” பயணம் தலைநகர் டெல்லியை கடந்து தற்போது உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாக்பத் பகுதியில் இன்று ராகுல் காந்தி தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, ராணுவத்தில் முன்பு இளைஞர்கள் 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவார்கள். ஆனால் நரேந்திர மோடி ஓய்வூதியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, 6 மாதம் பயிற்சி அளித்து, துப்பாக்கியை பிடித்து, 4 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, உங்களை வெளியேற்றிவிட்டு, வேலையில்லாமல் இருக்க முடிவெடுத்துள்ளார். இது புதிய இந்தியா.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடிய போது, போராட்டத்தில் கலந்து கொண்ட மாதிரியான புகைப்படத்தை (போராட்டத்தின் போது) எடுத்தால் உங்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்று மோடி கூறினார். இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பயமுறுத்துவது பாஜகவின் கொள்கை என்றார்.
நான் இந்த நடைபயணத்தில் யாத்திரையில் டி-சர்ட் அணிந்து செல்கிறேன். பல ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்து யாத்திரையில் என்னுடன் செல்கின்றனர். ஆனால், குளிர்காலத்தில் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஏன் ஸ்வெட்டர்/ஜாக்கெட் இல்லாமல் நடக்கிறார்கள் என்று ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை.
எனது டி-ஷர்ட்டில் உள்ள கேள்விகள் உண்மையான பிரச்சினை அல்ல. ஆனால் இந்தியாவின் குழந்தைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான ஆடை இல்லாமல் நடப்பது உண்மையான பிரச்சினை என்று கூறினார்.
மேலும், மக்களிடம் பணவீக்கம் குறித்து கூறுவதை விட்டுவிட்டு, 4 சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சிறுத்தைகள் காட்டில் சுற்றித் திரிவதாகவும் ஊடகங்கள் செய்தியில் கூறுகின்றன என ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.







