புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 40 தினங்களுக்கு மேலாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை
விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 90க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி
போலீசார் விசாரணை செய்து அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து வந்த நிலையில் பலர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து வருகின்றனர். இதனால் விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த
நபர்களின் வாக்குமூலங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் ஒரு சிலரை உண்மை
கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது. விரைவில் சிபிசிஐடி உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.







