சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை – எப்போது தொடக்கம்?

சென்னை- திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை ஜூலை 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை…

சென்னை- திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை ஜூலை 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐசிஎஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இங்கு இதுவரை 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல் வந்தே பாரத் ரயில், ‘ரயில் 18’ என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் சேவை புதுடெல்லி – வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட 23 வந்தே பாரத் ரயில்கள், இந்தியாவின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு130 கி.மீ. வேகத்தில் செல்ல ரயில் பாதைகள் தயாராக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சென்னை சென்ட்ரல் – திருப்பதி ரயிலை வருகிற ஜூலை 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நான்காவதாக சென்னை- நெல்லை இடையே ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.