குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனை ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பொதுநல மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.என்.பாட்டீல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த பரிசோனைகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாக கூறப்பட்டது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து வல்லுநர்கள் அனுமதி அளித்ததும், அது குறித்த கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையில் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், பரிசோதனை செய்யாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டால் அது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று கூறினர். பரிசோதனை முடிவடைந்தவுடன், தாமதமின்றி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பின்னர் இந்த வழக்கு செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.







