வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா, இப்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படம், ’வாடிவாசல்’. தற்போது சூரி நடிக்கும் ’விடுதலை’ படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அதன் பிறகு இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.
’வாடிவாசல்’, சி.சு.செல்லப்பாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே தலைப்பில் உருவாகும் படம். இதன் கதை, ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. தனது அப்பாவைக் குத்திக் கொன்ற ஜமீன் வீட்டின் கம்பீரக் காளையை, அவர் மகன் வெறியோடும் வீரத்தோடும் அடக்கி, இறந்து போன தந்தையின் வாக்கைக் காப்பாற்றும் கதை.
இதில் சூர்யா, அப்பா – மகனாக நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அந்த டைட்டிலில் வெறிகொண்ட அடங்காத காளை ஒன்று வாலை தூக்கியபடி, ஆவேசத்துடன் இருப்பது போன்ற நாணயம் இடம் பெற்றுள்ளது.
இந்த டைட்டிலை வெளியிட்டுள்ள கலைப்புலி எஸ்.தாணு, ‘நம் வீரத்தையும் வரலாற்றை யும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த டைட்டிலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.







