மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? பதிலளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,490 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாம் அலை குறித்த அச்சங்கள் தற்போது மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பாக குழந்தைகளை மூன்றாம் அலை அதிக அளவில் பாதிக்கும் என்கிற அச்சமும்,…

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,490 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாம் அலை குறித்த அச்சங்கள் தற்போது மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பாக குழந்தைகளை மூன்றாம் அலை அதிக அளவில் பாதிக்கும் என்கிற அச்சமும், மூன்றாம் அலைக்கு எதிராக தற்போதைய தடுப்பூசி வீரியமாய் செயல்படுமா என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

இக்கேள்விகளுக்கான விடையை பெற டெல்லியில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் துறையில் பணியாற்றும் மூத்த விஞ்ஞாணி முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரனிடம் கலந்துரையாடினோம். அதிலிருந்து

  1. தற்போதைய சூழலில் கொரோனா மூன்றாம் அலை எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

“2020 ஜூலை 1 முதல் 2020 டிசம்பர் 31 வரையிலான ஆறு மதங்கள் முதல் அலை எனவும் 2021 மார்ச் 15 முதல் 2021 மே 25 வரை உள்ள இரண்டு மாதங்கள் இரண்டாம் அலை எனவும் வகை செய்யப்படுகிறது. முதல் அலையின் ஆறு மாதங்களிலும் சேர்த்து மொத்தமாக ஏற்பட்ட நோய் தொற்று 96,81,181 . இதில் 1,31,338 நோய் தொற்றாளர்கள் மரணம் அடைந்தனர். இரண்டாம் அலையின் இரண்டு மாதங்களில் ஏற்பட்ட புதிய நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை 1,55,63,535 இதில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,48,506. அதாவது 184 நாட்கள் நீட்டித்த முதல் அலையின் பொது நாடு முழுவதும் தினமும் 714 பேர் சராசரியாக மரணம் அடைந்தனர். ஆனால் வெறும் 72 நாட்கள் மட்டுமே நீடித்த இரண்டாம் அலையின் தினசரி சராசரி மரணம் 2063; அதாவது சுமார் மூன்று மடங்கு அதிகம். பல மாநிலங்களில் இறப்புக்களை குறைத்து காட்டியுள்ளனர் என்பதை கணக்கில் வைத்து பார்த்தல் இரண்டாம் அலையில் நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் தினசரி ஏற்படும் சராசரி மரணவிகிதம் இதைவிட பல மடங்கு இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இதுவரை இந்தியாவில் சுமார் 20% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த நிலையில் மூன்றாம் அலை ஏற்பட்டால் இரண்டாம் அலையைவிட தினசரி சராசரி மரண எண்ணிக்கை பல மடங்கு அதகரிக்கக்கூடும் எனக் கூறத்தேவையில்லை.

ஒரே நேரத்தில் பலருக்கு தொற்று ஏற்பட்டதன் விளைவாக அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை தருவதில் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை போன்றவற்றை நாம் கண்கூடாக பார்த்தோம்.

இரண்டாம் அலைபோல உக்கிரமாக மூன்றாம் அலை ஏற்பட்டால் தினசரி உருவாகும் நோய் தொற்றளர்கள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக்கூடும்; தினசரி ஏற்படும் மரணங்கள் விகிதம் மிகும். மூன்றாம் அலை அலையாக இருக்காது; சுனாமியாகத்தான் இருக்கும்.

முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

பெரும் தொற்றை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கையாக, நெரிசல் பகுதிகளில் மற்றும் காற்றோட்டமில்ல இடங்களில் புழுங்குவதை தவிர்ப்பதும் அவசியம். எவ்வளவு விரைவில் கூடுமான தடுப்பூசி விநியோகம் செய்கிறோமோ அவ்வளவு அளவு மூன்றாம் அலையின் வீரியத்தை குறைக்கலாம். ”

  1. மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறதே?

“முதல் அலையில் வயது மூத்தவர்கள் இறப்பு கூடுதலாக இருந்தது என்றால் இரண்டாம் அலையில் இளம் வயதினரின் இறப்பு கூடியது; எனவே மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. யாரும் இதை நம்ப வேண்டாம்.

வயதுமுதல் அலையில் நோய்
தொற்றாளர்கள் விகிதம்
2ம் அலையில் நோய்
தொற்றாளர்கள் விகிதம்
முதல் அலையில்
இறப்பு விகிதம்
2ம் அலையில்
இறப்பு விகிதம்
10 4.03% 2.97% 0.27% 0.34%
10-20 8.07% 8.50% 0.53% 0.31%
20-30 20.41% 19.35% 2.08% 1.72%
30-40 21.05% 21.15% 5.27% 5.39%
40-50 17.16% 17.50% 11.98% 10.82%
50-60 14.80% 15.07% 23.29% 21.23%
60-70 9.01% 9.99% 28.76% 28.21%
70-80 4.17% 4.19% 19.99% 22.17%
80 1.31% 1.28% 7.82%9.81%
முதல் மற்றும் இரண்டாம் அலையின் பாதிப்பு மற்றும் இறப்பு அட்டவணை

முதல் இரண்டு அலைகளிலும் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் வயது விபரம் மற்றும் இறப்பு எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் குறிப்பிடும்படியான வேறுபாடு ஏதும் இல்லை. கீழே உள்ள பட்டியலை பார்த்தால் இது தெளிவாக விளங்கும். எனவே மூன்றாம் அலையிலும் குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பது தவறு. இது வீண் பீதி.

  1. மூன்றாம் அலையை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

“பொதுமக்கள் மற்றும் அரசு இணைந்துதான் தொற்று பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அரசைப் பொறுத்தவரை தடுப்பூசி விநியோகத்தை தீவிரப் படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனைகளை விரிவுப்படுத்தி யாருக்கெல்லாம் சந்தேகம் உள்ளதோ அவர்கள் எல்லோரும் தயங்காமல் பரிசோதனை செய்துகொள்ளும் அளவுக்குப் பரிசோதனை இடங்களை விரிவுப்படுத்த வேண்டும். மேலும் பலருக்கு தமது வீடுகளில் தனிமை படுத்திக்கொள்ள போதிய வசதி இருக்காது. அவர்களைப் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் நடத்தும் விதமாகவும் முகாம்களை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். தன்னார்வல அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் போன்ற அமைப்புக்களும் இத்தைகய முகாம்களைத் துவங்கலாம்.

மேலும் அடுத்த அலையில் கூடுதல் பாதிப்பு இருக்கக்கூடும் என நாம் எதிர் நோக்குவதால் மருத்துவ சிகிச்சை வசதி இப்போதே உருவாக்கித் தயார் நிலை செய்ய வேண்டும். தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க இப்போதே இனம் கண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். கொரோனா கட்டுப்பட்டு அறை மாவட்ட அளவில் மட்டும் போதாது. தாலுகா அளவில் ஏற்படுத்தி அந்த ஊழியர்களுக்கு இப்போதே பயிற்சி தர வேண்டும். தற்போது உள்ள மருத்தவ பணியாளர்கள் போதாது. எனவே தன்னார்வலர்களை இப்போதே பயிற்சி தந்து தற்காலிக மருத்துவ உதவியாளர்களைத் தயார் நிலை படுத்த வேண்டும்.”

  1. பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் மூன்றாவது அலைக்கு எதிரான செயல்திறனைக் கொண்டுள்ளதா?

“அந்நியன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அம்பி, ரெமோ மற்றும் அந்நியன் என மூன்று வேடத்தில் வலம் வரும்போது அவரது கைரேகை போன்ற அடையாளங்கள் மாறாது. அதுபோலத்தான் தற்போது உருவாகியுள்ள நாவல் கொரோனா வைரஸ் வேற்றுருவங்கள். அவை பல மாறுவேடங்களில் உலா வருகிறது என்றாலும் அவற்றின் பற்பல ஆண்டிஜென் மாறவில்லை. ஆண்டிஜென் அமைப்புகள் பெருமளவு மாறிவிட்டால் பரிணாமத்தில் குரங்கு போன்ற ஒரு விலங்கு மனிதனாக மாறியது போல அதனைப் புதிய தனியினம் – ஸ்டிரைன் – உருவாகிவிட்டது எனக் கூறுவோம். எனவே இன்று உள்ள தடுப்பூசிகள் தற்போது உருவாகியுள்ள வேற்றுருவங்களிடமிருந்து காக்க உதவும். பல ஆய்வுகளில் இதனைச் சோதனை செய்தும் பார்த்துள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் புதிய தனியுருவம் உருவானால் இப்போதைய தடுப்பூசிகள் செயலிழந்து விடலாம். கூடுதல் நபர்களிடம் கூடுதல் நாட்கள் வைரஸ் பரவும் போதுதான் இப்படி புதிய தனியுருவம் ஏற்பட முடியும். எனவே எவ்வளவு விரைவில் பெருமளவில் தடுப்பூசி தருகிறோமோ அவ்வளவு பாதுகாப்பு.”

  1. இரண்டாம் அலையில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது, அதே போல 3ம் அலை தாக்கத்தில் இதர தொற்று பாதிப்புகள் அதிகரிக்குமா?

“கொரோனா நோய் தீவிர நிலை அடையும்போது அவர்களுக்குச் சிகிச்சை தருவதற்கு நோய் தடுப்பாற்றல் மண்டலத்தின் செயல்பாடுகளைக் குறைக்கும் விதமாகச் சில ஸ்டிரைடு மருந்துகளைத் தருவார்கள். அது போன்ற சூழலில் சிலருக்கு போதிய நோய் தடுப்பாற்றல் இல்லாமல் போவதன் காரணமாகப் பூஞ்சை தொற்று ஏற்படும். முதல் அலையைவிடப் பெரும் அளவில் இரண்டாம் அலையில் நோய் தொற்றாளர்கள் உருவானது காரணமாகத்தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு பெரிதாகப் பேசப்படுகிறது. இரண்டாம் அலையைவிட மேலும் உக்கிரமாக மூன்றாம் அலை அமைந்தால் இன்றுள்ளது போலப் பல மடங்கு நோயாளிகளுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மூன்றாம் அலை உக்கிரமாக சடசடவென உயர்ந்துவிடாமல் தடுப்பது தான் ஒரே வழி.”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.