ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் பகுதியில், பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







