பிரதமரின் அழைப்பை ஏற்று இல்லந்தோறும் தேசிக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் புகைப்படக் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்து, பெட்ரோல் பங்க் வரும் வாடிக்கையாளர்களுக்க தேசியக்கொடியை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லியவர் பிரதமர் மோடி என்றார். பிரதமரின் அழைப்பை ஏற்று, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது என கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள 5,800 பெட்ரோல் பங்குகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் பங்குக்கு வந்த 6 லட்சம் பேருக்கு தேசியக்கொடி இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் கீழ்ப்பாக்கம் பாரத் பெட்ரோலியம் பங்கில் சுதந்திர தின நிகழ்ச்சியைக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி என்ற அவர், தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல தலைவர்கள் இருக்கிறார்கள் என்றார். வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள், 75-வது சுதந்திர தினம், நேதாஜியின் 125-வது பிறந்த நாள், பாரதியாரின் 100-ம் ஆண்டு ஆகியவற்றை நாம் கொண்டாடி வருகிறோம்.
தமிழ்நாட்டில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றிய மக்களுக்கு என் நன்றி தெரிவித்த எல்.முருகன், நாளை முதல் தூர்தர்ஷனில் ஸ்வராஜ் என்ற பெயரில், சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்