“தவெக ஆட்சியில் போதைக் கும்பல்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டன!” – கனிமொழி

தவெக ஆட்சியில் சாமானியர்கள் சாலையில் செல்ல முடியாத அளவுக்குப் போதைக் கும்பல்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டன என கனிமொழி தெரிவித்துள்ளார்.,

திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தூத்துக்குடியில் பிரின்ஸ்டன் என்பவர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, அவரது வாகனத்தின் மீது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய போதைக் கும்பலால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையிடம் புகார் அளித்தால் கொன்றுவிடுவதாகக் குடும்பத்தினரை அந்தக் கும்பல் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காலில் குண்டடிபட்டு, செயற்கைக் கால் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளியான பிரின்ஸ்டனுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு யார் பொறுப்பு? தவெக ஆட்சியில் சாமானியர்கள் சாலையில் செல்ல முடியாத அளவுக்குப் போதைக் கும்பல்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டன.

பாதிக்கப்பட்டவர் அளித்திருக்கும் புகாரின் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரின்ஸ்டனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.